மட்டக்களப்பில் துபாய்க்கு அனுப்புவதாக 150 பேரிடம் பண மோசடி : போலி முகவர் கைது

மட்டக்களப்பில் துபாய் நாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக தலா ஒருவரிடம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா வரை சுமார் 150 பேரிடம் சுமார் 2 கோடி ரூபா பணத்தை வாங்கி ஏமாற்றிய போலி முகவர் வீட்டை நேற்று வியாழக்கிழமை (10) பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டு போலி முகவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பகுதியில் அவரது உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்து கொண்டு ஒரு நிறுவனம் ஒன்றின் சந்தைபடுத்தல் குழு தலைவர் என்ற போலி அடையாள அட்டை ஒன்றை தயாரித்துள்ளார்.

இந்த அடையாள அட்டையை காட்டி  துபாய்க்கு குறித்த நிறுவனத்தின் அனுசரணையுடன் குறைந்த செலவான 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் வேலைக்கு அனுப்புவதாக அறிந்திருந்தனர்.

இதனையடுத்து,  சின்ன ஊறணியைச் சேர்ந்த 40 வயதுடையவர் ஒருவர் இந்த வெளிநாட்டு முகவர் தொடர்பாக அறிந்த நிலையில் அவரின் நண்பர்கள் உட்பட 40 பேரைச் சேர்த்து அந்த போலி முகவரிடம் அழைத்துச் சென்று தலா ஒருவருக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபா வீதம் 48 இலட்சம் ரூபா பணத்தை சட்டத்தரணி மூலம் ஒப்பந்தம் செய்துகொண்டு பணத்தை வழங்கியுள்ளார்.

இதில் கிளிநொச்சி முளங்காவில், மட்டக்களப்பு நகர், கல்லடி, கொக்கட்டிச்சோலை, வாழைச்சேனை, கொக்குவில் உட்பட பல்வேறுபட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பெண்கள் உட்பட 150 க்கு மேற்பட்டவர்கள் குறித்த போலி முகவரை சந்தித்தனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு கூட்டுறவு சங்க கட்டிட மண்டபத்தை ஒரு நாள் வாடகைக்கு எடுத்து அங்கு அனைவரையும் வரவழைத்து அவர்களின் ஆவணங்களை பரிசோதனை செய்து ஒரு போலி ஒப்பந்தம் செய்து கொண்டு முதலில் ஓரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாவை முற்பணமாக செலுத்துமாறும் மிகுதியை வெளிநாடு சென்றதும் தரவேண்டும் என தெரிவித்து, 3 வங்கி கணக்குகளை வழங்கி அதில் பணத்தை வைப்பு செய்யமாறு தெரிவித்ததையடுத்து, பலர் குறித்த வங்கி கணக்கில் பணத்தை வைப்பு செய்ததுடன் சிலர் நேரடியாக போலி முகவரிடம் பணத்தை கொடுத்துள்ளனர்.

இவ்வாறு கடந்த ஜனவரி தொடக்கம் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் பணத்தை கொடுத்து 7 மாதங்களாகியும் துபாய்க்கு அனுப்பாது ஏமாற்றி வந்த நிலையில், 11 ம் திகதி வீசா வந்துவிடும் எனவும் அனைவரும் போவதற்கு தயாராக இருக்குமாறு தெரிவித்ததையடுத்து, பலர் ஆடைகளை வாங்கி ஆயத்த நிலையில் இருந்துள்ளனர்.

இருந்தபோதும் போலி முகவர் தன்னை துபாயிலுள்ள பிரதான முகவர் ஏமாற்றிவிட்டார். எனவே, அவருக்கு எதிராக மட்டு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவில் முறைப்பாடு  செய்யவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதனையடுத்து, பணத்தை போலி முகவரிடம் கொடுத்த 60க்கும் மேற்பட்டோர் குற்ற விசாரணை பிரிவு காரியாலயத்தின் முன் ஒன்று கூடி காத்திருந்தபோது அங்கு முகவர் வராததையடுத்து ஒரு குழுவினர் முகவரின் நாவற்குடா வீட்டை முற்றகையிட்டு அவரை பிடித்துகொண்டு பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர் சுமார் 150 க்கு மேற்பட்டவர்களிடம் 2 கோடி ரூபாவுக்கு மேல் மோசடி செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ளவர்களின்  வாக்குமூலங்களை பதிவு செய்ததுடன் ஏனைவர்களை அவர்களுடைய பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதுடன், கைது செய்யப்பட்டவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.