மட்டக்களப்பில் வைத்தியசாலையிலிருந்து வீடு சென்றவர் விபத்தில் மரணம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபரொருவர் வீடு செல்லும் போது விபத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (18) காலை சந்திவெளி காவல் துறை பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.

வீதியில் விபத்துக்குள்ளான நிலையில் காணப்பட்ட நபர் அடையாளம் காணப்படாத நிலையில் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பின்னர் குடும்பத்தினர் அடையாளம் கண்டதை தொடர்ந்து உடல் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இவர் சில நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வைத்தியசாலையில் இருந்து தானாக வெளியேறி தனது வீடு  நோக்கி நடந்து செல்லும் போது வாகனம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல் துறையின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் வாழைச்சேனை – செம்மண்ணோடை பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய உசனார் வெள்ளைத்தம்பி என்பவராவார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.