மட்டக்களப்பு கோறளைப்பற்றில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தற்காலிக கட்டடங்கள் அகற்றல்

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவின் நாவலடி பிரதான கொழும்பு வீதியின் அருகில் உள்ள காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிக கட்டடங்களை கனரக இயந்திர சாதனத்துடன் அகற்றும் பணியினை பொலிசாரின் பாதுகாப்புடன் மகாவலி அமைச்சின் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (11) மேற்கொண்டனர்.

 

இதன்போது பொலிசாருக்கும் காணிகளை அமைத்தோருக்குமிடையில் கடும் வாக்குவாதமும் கலவரமும் ஏற்பட்டது. நிலமைகளை கட்டுப்படுவதற்கு பெருமளவு பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பிரதான நாவலடி கொழும்பு வீதியின் சட்டவிரோதமான முறையில் மகாவலி அமைச்சுக்குரிய சுமார் 28 ஏக்கர் அளவுடைய காணிகளை அபகரித்து வேலிகளை அமைத்து தற்காலிக குடியிருப்புக்களை அமைக்கும் நடவடிக்கையில் ஓட்டமாவடியைச் சேர்ந்தோர் சிலர் கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தடுக்கும் நடவடிக்கையில் பிரதேச செயலக மற்றும் வன இலாகா திணைக்களங்களுக்கு காணி அதிகாரம் இல்லை என்ற காரணம் தெரிவித்து நிர்வாக நடவடிக்கையை மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டது.

 

இதன் காரணமாக கடந்த 07.08.2023.ஆம் திகதியன்று பிரதேசத்திற்கு வருகை தந்த மகாவலி அமைச்சின் அதிகாரிகள் குறித்த இடத்தில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட வேலிகள் மற்றும் தற்காலிகக் கட்டடங்களை அகற்றும்படி மகாவலி அமைச்சின் அதிகாரிகள்  பொலிசாரின் உதவியுடன் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

அகற்றுவதற்கான கால அவகாசம் சம்பந்தப்பட்டோரினால் அன்றைய தினம் அதிகாரிகளிடம் வேண்டப்பட்டிருந்தது.வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த நிலையில் அவர்கள் அகற்றாததினால் மகாவலி அமைச்சிற்குரிய காணி என்ற காரணத்தினால் இன்று அவற்றை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கடந்த 6.8.2023.ஆம் திகதியன்று சம்பவ இடததிற்கு பொதுமக்களுடன் கலந்துரையாடடி பின்னர் விடயம் தொடர்பாக மகாவலி அமைச்சு, ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.