மட்டு. மாணவன் பேராதனையில் தன்னுயிரை மாய்க்க முயற்சி

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சுகாதார பீடத்தின் முதலாம் வருட மாணவன் ஒருவர் தான் தங்கியிருந்த விடுதியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் தொடர்பில் பேராதனைப் பல்கலைக்கழகமும் பேராதனை பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் வௌ்ளிக்கிழமை (07) அதிகாலை தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார். அவருடன் தங்கியிருந்த மாணவர்கள் இருவரில் ஒருவர், அறையில் தங்கியிருந்ததாகவும், மற்றையவர் சில தேவைகளுக்காக அறையை விட்டு வெளியே சென்றிருந்துள்ளார்.

அந்த மாணவன், திரும்பி வந்து பார்த்த போது அறையின் கதவு பூட்டப்பட்டிருந்துள்ளது. எனினும், ஜன்னல் வழியாக அறைக்குள் சென்று பார்த்த போது அவர் தரையில் கிடப்பதை கண்டு மற்ற மாணவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்கள் குழுவுக்கு ஆபாசமான காட்சிகள் அடங்கிய காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் அனுப்பி பகிடி வதைச் செய்து துன்புறுத்தியதாக, இந்த மாணவனுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

அந்த மாணவனை, ஜூலை 7ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த மாணவன் ஆஜராகவில்லை என பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துன்புறுத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் வைக்கப்பட்டதையடுத்து, திணைக்கள அதிகாரிகள் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். அதற்கு அந்தப் பல்கலைக்கழக மாணவர் சங்கங்களில் இருந்து கடும் எதிர்ப்பு எழுந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.