மது நிலையங்களை கண்டறிந்து தடை செய்

சட்டப்பூர்வ அனுமதி பெற்று இயங்கும் மது விற்பனை நிலையங்களுக்கு அப்பால் நுவரெலியா மாநகரின் பல இடங்களில் அனுமயின்றி மது விற்பனை நிலையங்கள் இயங்குகின்றன. அவற்றைக் கண்டறிந்து தடை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இலங்கை சமூக நடவடிக்கை மாற்றம்” எனும் அமைப்பு மற்றும் சர்வமத குருமார்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.  இந்த  அமைப்பு தலைமையில் நுவரெலியா கூட்டுறவு சங்க விடுதியில் ஊடகவியலாளர் சந்திப்பை புதன்கிழமை (05) நடத்தியது.

இதில், அவ்வமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் சந்திரா பியசீலி மற்றும் ருவான் ஏமந்த ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன்  இராகலை சூரியகந்த பௌத்த விகாரை பீடாதிபதி சுமேந்தலங்கார கொங்கொட, ஆலய குருக்கள் ஏ.நந்தகுமார், மௌலவி எ.எ.எம்.இப்திகார் உள்ளிட்டோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தமது கருத்துக்களை தெரிவித்த சர்வ மத குருமார்கள், நுவரெலியா சுற்றுலா நகரம் என்பதனால் அதிகமான மதுபான கடைகளை அமைத்து நகருக்கு வருபவர்களை மதுவுக்கு அடிமைகளாக்க இடமளிக்க முடியாது.

அதேபோல குடும்பஸ்தர் பலர் மதுவுக்கு அடிமையாகி தாம் உழைக்கும் பணத்தை மதுவுக்கு செலவு செய்து வருவதால் குடும்ப வாழ்கையில் பிணக்குகள் ஏற்பட்டு நிம்மதி இழந்து சண்டை சச்சரவு என்று பொலிஸ், நீதிமன்றமென செல்கின்றனர்.  நோய்களுக்கும் இலக்காகி விடுகின்றனர். ஆகையால், நுவரெலியா மாவட்டத்தில் புதிய மதுபான நிலையங்களை திறக்க அனுமயளிக்கக்கூடாது. அத்துடன், , சட்டவிரோதமாக இயங்கும் மதுபான நிலையங்களை இனங்கண்டு அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.