முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் கருத்துத்துத் தெரிவிக்கையில்,
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஒப்படைக்கப்பட்ட எமது உறவுளுக்கு என்ன நடந்தது, சரணடைந்த உறவுகளுக்கு என்ன நடந்தது, வீடுவீடாகச் சென்று கடந்தப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது எனக் கடந்த 14வருடங்களாக எமது தாய்மார்கள் வீதிகளிலும், கொழுத்துகின்ற வெய்யிலிலும் நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர்.
இவ்வாறான சூழலில் அண்மையில் கொக்குத் தொடுவாயில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழி என்பது மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.
இன அழிப்பினைச் செய்திருக்கக்கூடிய இந்த இலங்கை அரசும், அரசுடைய இயந்திரங்களும் இதற்கான விசாரணையினை முன்னெடுப்பதென்பது போலித்தனமானது. தமிழர்களான எமக்கு உள்ளக விசாரணையிலே நம்பிக்கையில்லை.
ஆகயினால்தான் நாம் சர்வதேச கண்காணிப்பினையும், சர்வதேச விசாரணையினையும் வேண்டிநிற்கின்றோம்.
சர்வதேச வல்லரசு நாடுகள், சர்வதேச அமைப்புக்கள் இந்த விடயத்திலே தலையிட்டு, நீதிக்கான குரலை எழுப்பவேண்டும்.
உண்மையை உண்மையான விதத்திலே கண்டறியவேண்டும். உண்மைக்குழு, நல்லிணக்கக்குழுவென எத்தனையோ ஆணைக்குழுக்களைக் கண்டுவிட்டோம். எதுவுமே நடந்ததாகத் தெரியவில்லை.
காலம் இழுத்தடிக்கப்படுகின்றது. உண்மை மறைக்கப்படுகின்றது. ஈழத்தமிழர்களுடைய நீதி மறுக்கப்படுகின்றது என்பதுதான் உண்மை.
ஆகவே சர்வதேசம் தலையீடுசெய்தால்தான் உண்மை வெளிவரும். அதையே நாம் ஏற்றுக்கொள்ளுவோம். அதுவரையில் நாம் உள்ளக விசாரணையினையோ, வேறு எந்தப் பொறிமுறையினையோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.
இப்படியான மனிதப் புதைகுழிகள் எமது தமிழர் தாயகத்தில் வெளிப்படுவது, இங்கு இன அழிப்பு இடம்பெற்றது என்பதற்கு ஆதாரமாக தஇருக்கின்றது. இயற்கையின் அருளால் அவை வெளிப்படுத்தப்படுகின்றன. தற்போது உண்மைகள் வெளிவரும் காலம் வந்துவிட்டது.
ஈழத் தமிழினம் விளித்துக்கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். எமக்குள்ளே நாம் அமைப்புக்களாகவும், கட்சிகளாகவும், தமிழ்த்தேசியப் பற்றாளர்களாகவும் அனைவரும் ஓரணியாக ஒன்றிணைந்து செயற்படவேண்டிய காலம் வந்துவிட்டது.
இன்னும் எத்தனை காலம்தான் எங்களை நாங்களே ஏமாற்றிக்கொண்டிருக்கப்போகின்றோம்.
ஆகவே தமிழர்களாக அனைவருமே கட்சிபேதங்களைக் கடந்து, மத பேதங்களைக் கடந்து, பிரதேச பேதத்தினைக்கடந்து, அமைப்புகளுக்குள் இருக்கக்கூடிய நிர்வாக பேதங்களைக் கடந்து, அனைத்தபே் பேதங்களையும் கடந்து அனைவரும் ஓரணியிலே செயற்படவேண்டும். அடிப்படை நீதிப்படி செயற்படவேண்டும். அவ்வாறு ஒன்றிணையும்போதுதான் எமக்கான நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும்.
ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு என்பது சர்வதேசத்தினுடைய ஏர்ப்பாட்டிலும், சர்வதேசத்தினுடைய கண்காணிப்பிலும் நடாத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பினூடாகவே எங்களுடைய தலைவிதியை நாங்கள் தீர்மானிக்கமுடியும். இது மிகவும் அடிப்படையான ஜனநாயகப் பண்பாகும். ஆகவே சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும்.
மனிதப்புதைகுழி விசாரணையானது சர்வதேச மட்டத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு இனப்படுகொலையினைச் செய்திருக்கக்கூடிய இனப்படுகொலையாளிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிலே நிறுத்தப்பட்டு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.
காலம் காலமாக தமிழர்களாக நாம் இயற்கையினை வழிபட்டோம். இறைவனை வழிபட்டோம். அந்த வழிபாட்டையே தற்போது மாற்றுகின்ற சூழல்தான் குருந்தூர்மலையிலும், வெடுக்குநாறி மலையிலும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
பிரித்தானியர்கள் இங்கு வந்து ஆட்சிசெய்வதற்கு முன்பாக தனித் தமிழ் இராட்சியமாக பண்டார வன்னியனாக இருக்கலாம், சங்கிலியனாக இருக்கலாம் வீரத் தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி இதுவாகும்.
பிரித்தானியர்கள் இங்கு வந்து எந்தவொரு ஜனநாயகமும் இல்லாமல், அனைவரையும் ஒரே நாடாக வாழவேண்டுமென ஒன்றிணைத்ததுதான் இன்று நாம் துன்பப்படுவதற்கு காரணமாகும்.
ஆகவே 1948ஆம்ஆண்டிற்கு பிற்பாடு இற்றைவரை இடம்பெற்றிலுக்கக்கூடிய அத்தனை இனப்படுகொலைகளும் 1956ஆம் ஆண்டாக இருக்கலாம், 1977ஆக இருக்கலாம், 1978ஆக இருக்கலாம், 1983கறுப்பு ஜூலை இனப்படுகொலையாக இருக்கலாம், 2009முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாக இருக்கலாம் அத்தனை இனப்படுகொலைகளும் எமது இனம் அழிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போது கட்டமைப்பு ரீதியிலும், வேறு விதமாகவும் போதைப்பொருள், இலஞ்ச ஊழல் என அனைத்துச் செயற்பாடுகளும் வடகிழக்கு மாகாணங்களிலே இலங்கை அரசினால் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றது.
நீதிக்காக குரல்கொடுக்கின்ற சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், திடீரென எவ்வித விசாரணைகளுமின்றி, எந்தவித நோக்கமுமின்றி கைதுசெய்யப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். இவ்வாறாக திறந்தவெளிச்சிறையிலே நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
இப்படியான நிலையில் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும் என்பதே எமது உறுதியான வேண்டுகோளாக இருக்கின்றது.