மனிதப் புதைகுழிக்கு நீதிகோரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் நீதிகோரி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஆதரவு வழங்குகிறோம் என அறிவித்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிறாஜா அனுப்பியுள் ஊடக செய்தியில் தெரிவிக்க்கப்பட்டுள்ளதாவது.

2023 ஜீலைத் திங்கள் இலங்கையில் குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் தமிழின படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் நிறைவு பெற்றும் தமிழினத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்பது உலகறிந்த வரலாறாகும்.

தமிழின அழிப்பிற்கு ஆளாகிய தமிழின மக்களின் இக்காலம் துக்க காலமாகும். தங்கள் தேசத்துக்கு தமிழ் மக்களுக்கு நீதி கோரி காணாமல் ஆக்கப்பட்ட தாய்க்குலம் தமிழ் மக்கள் ஆராத் துயருடன் கண்ணீரும் கம்பலையுமாய் எதிர்வரும் 28ம் நாளை துக்கநாளாக அறிவித்துள்ளமையை நாமெல்லாம் ஆதரித்து ஹர்த்தாலாக கடைப்பிடிக்கின்றோம்.

தமிழர் மனிதகுலம் புதைகுழிக்குள் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டமை இலங்கையில் கறைபடிந்த வரலாறாயினும் அந்த ஆத்மாக்களுக்கு ஆறுதலும் வருங்கால தமிழனத்திற்கு நீதியும் விடுதலையும் கிடைக்க வேண்டி நடைபெறும் கிளர்ச்சிகளையும் போராட்டங்களையும் ஆதரித்து கடைப்பிடிக்க வேண்டியது பெரும் கடப்பாடாகும் என அழைப்பு விடுக்கின்றோம் என்றுள்ளது.