மலர்சாலை உரிமையாளர்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களாக நியமிக்கலாமே ?

வைத்தியசாலையில் பிரேத அறை  அமைக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை  சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாயின் மலர்சாலைகளின்  உரிமையாளர்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களாக நியமிக்கலாமே? அப்போது சுகாதார அமைச்சர் குறிப்பிடுவதை போல் இலகுவில் செயற்பட முடியும். சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து சில்லறை தனமானது.

ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற  உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாடு ஸ்திரமடைந்து விட்டது, மக்கள் சுகபோகமாக வாழ்கிறார்கள் என அரசாங்கமும், ஒருசில அரசியல்வாதிகளும் உளறிக்கொள்கிறார்கள்.

நாடு இன்றும் நெருக்கடியில் உள்ளது என்பதே உண்மை. எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு பின்னர் பொருளாதார பாதிப்பில் இருந்து மீளலாம் என குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் பகல் கனவு காண்கிறது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீள்வதற்கு நாங்கள் (எதிர்க்கட்சிகள்) ஒத்துழைப்பு வழங்கவில்லை என அரசாங்கம் குறிப்பிடுகிறது.

அத்துடன் நாட்டை நாங்கள் வங்குரோத்து நிலைக்கு தள்ளினோம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு கருத்துரைக்கிறார்கள்.

ராஜபக்ஷர்கள் உட்பட அவர்களின் சகாக்கள் அரச நிதியை மோசடி செய்து, தேசிய வளங்களை விற்கு அதிலும் கொள்ளையடித்ததால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை முழு உலகமும் நன்கு அறியும்.

இவ்வாறான நிலையில் நிதி வங்குரோத்து தொடர்பில் ஆராய ராஜபக்ஷர்களின் சகாக்கள் தலைமையில் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தெரிவுக்குழு ராஜபக்ஷர்களை தூய்மைப்படுத்தும் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். இவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் இனி ஒரு சதம் கூட ஊழல் இடம்பெறாது என மக்கள் மகிழ்வுடன் இருக்கலாம் .

மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளை மாத்திரம் அரசாங்கம் முன்னெடுக்கிறது. ஊழலை எதிர்ப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு பிரபல்யமான ஊழல் மோசடிகள் அரச ஆதரவுடன் இடம்பெறுகிறது.

நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெற்றோர் பட்டினியில் இருந்து  தமது பிள்ளைகளுக்கு உணவு வழங்குகிறார்கள்.

இவ்வாறான நிலையில் தேசிய விவசாயத்துறையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசிய உற்பத்திகளை மேம்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த ஐந்து மாதத்துக்குள் மாத்திரம் 230 பில்லியன் ரூபா பெறுமதியான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் சுகாதாரத்துறை பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டுள்ளது. தரமற்ற மருந்து கொள்வனவினால் இலவச மருத்துவ துறையை நம்பியிருக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அரசாங்கத்துக்கு சார்பானவர்கள் மருந்து கொள்வனவில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது இயல்பானதே என்று குறிப்பிடுகிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் இவ்வாறான நிலை ஏற்பட்டால் சுகாதார அமைச்சர் முதல் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அனைவரும் இந்நேரம் சிறைக்கு சென்றிருப்பார்கள்.

வைத்தியசாலையில் பிரேத அறை  அமைக்கப்பட்டுள்ளதற்கான காரணத்தை  சுகாதாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறாயின் மலர்சாலை உரிமையாளர்களை வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களாக நியமிக்கலாமே? அப்போது சுகாதார அமைச்சர் குறிப்பிடுவதை போல் இலகுவில் செயற்பட முடியும்.சுகாதாரத்துறை அமைச்சரின் கருத்து சில்லறை தனமானது.ஜனாதிபதி விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றார்.