மலைநீலியம்மன் ஆலயத்திற்குரிய காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை

தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டு புத்தவிகாரை அமைக்கப்பட்டுவரும் மலைநீலியம்மன் ஆலயத்திற்குரிய காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லடி பகுதியில் அமைந்துள்ள மலைநீலி அம்மன் ஆலயத்தின் காணிகள் தொல்லியலுக்குரிய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டு, கையகப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அது பௌத்தத்திற்குரிய பகுதியாக உரிமைகோரி அப்பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்றது.

2006ம் ஆண்டு அப்பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலை காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு உட்பட பல்வேறு இடங்களில் தஞ்சமடைந்தார்கள். இதன்போது 1835ம் ஆண்டுக்கு முற்பட்ட பழமையான வரலாற்றைக் கொண்ட மலைநீலி அம்மன் ஆலயமானது விமானத்தாக்குதலினால் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தது.

இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் 2007ம் ஆண்டு மீள குடியமர்ந்;தபோது குறித்த ஆலயம் இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆலயத்தின் இடிபாடுகள் அகற்றப்பட்ட நிலையில் தொல்லியலுக்குரிய இடமாகவும் கையகப்படுத்தப்பட்டு அம்மனின் விக்கிரகம் வீதியில் போடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையில் 2009ம் ஆண்டு பௌத்த பிக்குகளினால் இவ் ஆலயமானது பௌத்தத்திற்குரியது எனக்கூறி ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதோடு வெளி இடங்களில் இருந்து பாரிய கற்களை கொண்டுவந்து பல கட்டுமானங்களும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன் கிராம மக்கள் காலாகாலமாக நெற்செய்கையை மேற்கொண்டுவந்த ஆலயத்தைச் சூழவுள்ள 50 ஏக்கருக்கு மேற்பட்ட வயற்காணிகளும் பறிமுதல் செய்யப்பட்டு மக்களுடைய வாழ்வாதாரமும் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொல்லியலுக்குரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள குறித்த ஆலய வளாகத்தினுள் பிக்குகளின் கட்டுமானங்களுக்கான அனுமதியை வழங்கி பாராபட்சமான முறையில் தொல்லியல் திணைக்களம் செயற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருவதோடு நீண்டகாலமாக வீதியோரத்தில் இருக்கின்ற தமது ஆலயத்தை குறித்த காணிக்குள் வைத்து வழிபட அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.