மலையக எழுச்சிப் பேரணியினர் இன்று தம்புள்ளையில் ஓய்வு

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் இடம்பெற்றுவரும் நடைபவனி நேற்று (09) தம்புள்ளையை அடைந்ததையடுத்து, இன்று வியாழக்கிழமை (10) முழுவதும் பேரணியினர் பயணம் மேற்கொள்ளாமல் ஓய்வெடுத்துவிட்டு, நாளை தம்புள்ளையிலிருந்து தமது பயணத்தை ஆரம்பித்து நாலந்தா வரை செல்லவுள்ளனர்.

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் இந்த மலையக மக்களின் தலைமன்னார் முதல் மாத்தளை வரையான எழுச்சி நடைபயண நிகழ்வுகள் கடந்த ஜூலை 28ஆம் திகதி தலைமன்னார் புனித லோரன்ஸ் தேவாலயத்தில் ஆரம்பமானது.

அடுத்து, மறுநாள் 29ஆம் திகதி தேவாலய வளாகத்திலிருந்து பேரணியினர் பயணத்தை தொடங்கியதை தொடர்ந்து, 14ஆம் நாளான இன்று தம்புள்ளையில் ஓய்வெடுக்கின்றனர்.

16 நாள் பயணமான இந்த நடைபவனியில் பேரணியினர் நாளை (11) நாலந்தாவுக்கு சென்று, நாளை மறுதினம் சனிக்கிழமை 12ஆம் திகதி மாத்தளையை அடைவதோடு இந்த மாபெரும் மலையக மக்களின் எழுச்சிப் பயணம் நிறைவுபெறும்.