மலையக மக்களின் எழுச்சிப் பேரணிக்கு செட்டிக்குளத்தில் வரவேற்பு!

லையக மக்களின் எழுச்சிப் பயணத்தின் 7ஆம் நாளான இன்று (03) பேரணியினர் மடுவிலிருந்து ஆரம்பித்த நடைபயணத்தை செட்டிக்குளத்தில் நிறைவு செய்தனர்.

இதன்போது செட்டிக்குளம் பகுதியை அடைந்த மலையக மக்களை அப்பகுதி மக்கள் வரவேற்று, அன்பு பாராட்டி, உணவுப் பண்டங்களை வழங்கினர்.

அவ்வேளை மலையக மக்களுக்காக தாம் என்றும் குரல் கொடுப்போம் என்றும், அவர்களது துன்ப, துயரங்களில் தாம் என்றென்றும் உடனிருப்போம் என்றும் கூறி செட்டிக்குளம் மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவில் முன்னெடுக்கப்பட்டுவரும் தலைமன்னார் தொடக்கம் மாத்தளை வரையான நடைபவனி நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் ஆரம்பமான நிலையில் இன்று 7ஆம் நாளை எட்டியுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் ஆகஸ்ட் 12ஆம் திகதி இப்பேரணி மாத்தளையை அடைவதோடு இந்த நடைபவனி நிகழ்வுகள் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.