மாகாண கூட்டுறவுத் திணைக்களத்துக்கு அதிகாரமில்லை

பனை அபிவிருத்தி வாரம் வடக்கு மாகாண அமைச்சரவையின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இதை கொண்டாடாமல் கைவிடவோ மாற்றியமைக்கவோ வட மாகாண கூட்டுறவுத் திணைக்களத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண கூட்டுறவுத் திணைக்களம் ஆடிப் பிறப்பை முன்னிட்டு ஜூலை 14 முதல் 16ஆம் திகதி வரையான மூன்று நாட்கள் நல்லூர் கிட்டு பூங்காவில் பனை உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பாக பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கண்டனக் கருத்தினை அவர் பதிவு செய்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சு கூட்டுறவுத் திணைக்களத்தையும் பனை, தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களையும், பனை அபிவிருத்திச் சபையையும் இணைத்து ஆண்டுதோறும் ஜூலை 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான ஒரு வார காலப்பகுதியை வட மாகாண பனை அபிவிருத்தி வாரமாக 2015ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடி வந்துள்ளது.

ஆனால், கடந்த சில வருடங்களாக பனை அபிவிருத்தி வாரத்தின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் அதனை கொண்டாடாமல் தவிர்த்தோ அல்லது மாற்றியமைத்தோ மாகாண கூட்டுறவுத் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.

பனை அபிவிருத்தி வாரம் வடக்கு மாகாண அமைச்சரவையின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இதனைக் கைவிடவோ, மாற்றியமைக்கவோ திணைக்களத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

தமிழ் மக்களின் பண்பாட்டை ‘பனைப் பண்பாடு’ என்று சொல்லும் அளவுக்கு உணவு முதல் உறையுள் வரை எமது வாழ்வியலில் பிரதான இடம்பிடித்துவந்த பனை வளம் தற்போது எமக்கு அந்நியமான ஒரு வளமாக மாறியுள்ளது.

பனைப் பொருட்களின் பயன்பாடு அருகிவருவதன் காரணமாக பனை வளத்தை தொழில் மூலாதாரமாக பயன்படுத்தி வந்த மக்கள் திரளின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அத்தோடு, போர்க்காலத்தில் பெரும் அழிவை சந்தித்த எமது பனைவளம் போருக்குப் பின்னரும் அனுமதியின்றி பெருமளவுக்கு அழிக்கப்படுகிறது. இது இயற்கைச் சூழலின் சமநிலையை பெரிதும் பாதிப்பதாக உள்ளது.

இவற்றை கருத்திற்கொண்டே பனை வளத்தை பெருக்கவும், நவீன காலத்துக்கேற்ப பனை பயன்பாட்டை நுகர்வோரை ஈர்க்கும் வகையில் அபிவிருத்தி செய்யவும், இதன் மூலம் பனை பொருளாதாரத்தை விருத்தி செய்யவும் அறிஞர்களினதும் பொது மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஆண்டுதோறும் தாலகாவலர் அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்களின் நினைவுதினமான ஜூலை 22ஆம் திகதியில் இருந்து ஒரு வார காலப்பகுதியை வட மாகாண பனை அபிலிருத்தி வாரமாக கடைப்பிடிப்பதற்கு வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை 2015ஆம் ஆண்டில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அமரர் கலாநிதி கந்தையா கனகராசா அவர்கள் பனை அபிவிருத்திச் சபை தோற்றம் பெறுவதற்கு முன்பாகவே தனியொருவராக தமிழர் தாயகம் முழுவதும் பனை விதைகளை விநியோகித்து பனந்தோப்புகள் உருவாக காரணமாக அமைந்தார்.

இவர் பனை அபிவிருத்திச் சபையின் இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்து, பனை அபிவிருத்தியில் பெரும் பங்காற்றியவர்.

இவர் ஆற்றிய பணிகளுக்காக அமரத்துவத்தின் பின்னர் இவருக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

தாலகாவலரான அன்னாருக்கு உயரிய கெளரவம் வழங்கும் பொருட்டே வட மாகாண பனை அபிவிருத்தி வாரத்துக்குரிய காலப்பகுதியாக, அவரது நினைவு தினமான ஜூலை 22ஆம் திகதி தொடக்கம் 28ஆம் திகதி வரையான காலப்பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஒப்புதலுடன் உயரிய நோக்குடன் கொண்டாடப்பட்டு வந்த பனை அபிவிருத்தி வாரத்தை தனியே ஆடிப்பிறப்புக் கூழுக்கு பனங்கட்டி விற்பதுடன் சுருக்கிக்கொள்வது எவ்விதத்திலும் ஏற்புடையது அல்ல.

இதன் பல்பரிமாணத்தை வட மாகாண கூட்டுறவுத் திணைக்களம் புரிந்துகொண்டு அடுத்த ஆண்டிலிருந்தாவது உரிய காலப்பகுதியில், உரிய முறையில் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், ஆய்வரங்குகளோடு பனை அபிவிருத்தி வாரத்தை மிகச் சிறப்பாக கொண்டாட முன்வர வேண்டும். தவறின் தமிழரின் மாண்புமிகு அடையாளமான பனைக்குத் தவறிழைத்த வரலாற்றுப் பிழையை சுமக்க நேரிடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.