மாணவியை வன்புணர முயற்சி: ஆசிரியர் கைது

தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மாணவியை அழைத்து அந்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதற்கு முயன்றார் என்றக் குற்றச்சாட்டில்  ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கற்பிக்கும்  ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொகவந்தலாவை பொலிஸார், ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பாடசாலை முடிந்தவுடன் தன்னுடைய உத்தியோகபூர்வ இல்லத்துக்கு வருமாறு செவ்வாய்க்கிழமை (15) மாணவியை அழைத்துள்ளார். அவ்வாறே மாணவியும் சென்றுள்ளார். அதன்போதே, ஆசிரியர் அம்மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றுள்ளார்.

அது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலேயே ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்திய பரிசோதனைக்காக மாணவி, பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.