சுமார் பத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிவெலவில் உள்ள எம்.பிக்களின் குடியிருப்புகளில் தொடர்ந்தும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உத்தியோகபூர்வ குடியிருப்பு வளாகத்தில் உள்ள வீடுகளை பயன்படுத்த அவர்களுக்கு சட்டபூர்வ உரிமை இல்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடியிருப்புகளை தமது விருப்பத்துக்குரிய முன்னாள் எம்.பி.க்களுக்கு வழங்கியுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.
இந்த நிலைமையை கருத்திற்கொண்டு, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே மாதிவெலவில் உள்ள எம்.பிக்களின் வீடுகளை பயன்படுத்த முடியும் என கட்சித் தலைவர்கள், அனைத்து உறுப்பினர்களுக்கும் நினைவூட்டியுள்ளனர்.
மாதிவெல உத்தியோகபூர்வ வீட்டுத் தொகுதியில் சுமார் 110 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்பது பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.