முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் நீக்கம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சில சலுகைகளை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி சிறப்புரிமைச் சட்டத்தின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு ஓய்வூதியம், வீடு, மூன்று வாகனங்கள், எரிபொருள் மற்றும் தனிப்பட்ட செயலாளர் ஆகியவையே உரித்துடையவை.

ஆனால் கடந்த காலங்களில் தண்ணீர் கட்டணம், மின்சார கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட பல சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளின் கீழ்  இணைக்கப்பட்டன.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை கேள்விக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பில் ஜனாதிபதி செயற்படும் சிறப்புரிமைகள் சட்டத்தின் பிரகாரம் செயற்படுமாறு அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இனிமேல் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகைகளை வழங்கும் போது, ஜனாதிபதி சிறப்புரிமை சட்டத்துக்கு புறம்பாக வழங்கப்பட்டுள்ள சலுகைகளை குறைக்க வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.