முன்னாள் பேராசிரியையின் 70 இலட்சம் ரூபா கொடுப்பனவு போலி ஆவணங்கள் மூலம் மோசடி!

பேராதனை பல்கலைக்கழக கலைப் பீடத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த பேராசிரியை ஒருவருக்கு உரித்தான சுமார் 70 இலட்சம் ரூபா பணத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் அவரது கணவருக்கு வழங்கிய சம்பவம் ஒன்று கணக்காய்வாளர் நாயகம் அம்பலப்படுத்தியுள்ளார்.

புதன்கிழமை (09)  கணக்காய்வாளர் நாயகம் அந்த பல்கலைக்கழக நிர்வாகத்தை கோப் குழுவின் முன் அழைத்தபோது இது தெரிய வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

2020ஆம் ஆண்டு இடம்பெற்ற இச்சம்பவம் போலி ஆவணங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்ட மோசடி எனத் தெரிவித்த கணக்காய்வாளர் நாயகம், இது தொடர்பில் இதுவரையில் ஏன் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு  அபகீர்த்தியை ஏற்படுத்தும் இவ்வாறான சம்பவங்களை நிறுத்துவதற்கு நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும் என கோப் குழு வலியுறுத்தியுள்ளது.