மேர்வின் சில்வாவிற்கு வைத்திய சிகிச்சை வழங்க வேண்டும் அல்லது கைதுசெய்ய வேண்டும்

எனது பார்வையின் கீழ் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு தலையில் பழுது உள்ளது போல் தெரிகிறது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (14) ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இவர் அரசியலில் இல்லாத கட்சிகள் இல்லை.  அனைத்துக் கட்சிகளிலும் இருந்து, எல்லா கட்சியினரும் அவரை துரத்தி உள்ளார்கள். தான் இருக்கின்றார் என்பதை காண்பிப்பதற்காக இவ்வாறு மடமைத்தனமான பேச்சுக்களை பேசுகின்றார்.

இவரை கணக்கெடுப்பதே மிகவும் பிழை. அவரை கவனிக்காமல் அவர்பாட்டிலேயே செல்வதற்கு விட்டுவிட வேண்டும்.

உண்மையாகவே இந்த நாட்டில் சட்டம், ஒழுங்குகள் இருக்கின்றது என்றால் பொலிஸார் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஏனென்றால் இவர் ஒன்று வன்முறையை தூண்டுகின்றார் இரண்டாவது இன மோதலை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றார்.

இவருக்கு இனமோதலை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு  மனோநிலை பிரச்சினை என்றால் அதற்கான வைத்தியத்தை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

இல்லையேல் இவரை இந்த இரண்டு குற்றத்திற்காகவும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.