யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று முன்தினம் (07) மாலை யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தும்பங்கேனி சுரவனையடிஊற்று கிராமத்தை சேர்ந்த 59 வயதுடையை நாகமணி நாராயனபிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு நேற்று மாலை ஆலய வழிபாட்டுக்கு சென்றவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் குறித்த பகுதியில் சைக்கிள் மற்றும் சடலத்தினை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் காட்டு யானையின் தாக்குதல்களுக்கு உள்ளாகிவரும் நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பலகாலமாக வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானை மனித மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.