வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் காவல் துறையினர் தெரிவித்தனர்.
வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோவிலடி பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17) என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
“கடந்த நான்கு மாதங்களாக சிறுமி நல்லூர் – கல்வியங்காடு சட்டநாதர் கோவில் அருகே உள்ள வீடு ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு வீட்டிலேயே தங்குமிட வசதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (23) வேலைக்கு அமர்த்திய குடும்பத்தினர் வெளியில் சென்றுள்ளனர். வீடு திரும்பி வந்து பார்க்கையில் சிறுமி தூக்கிட்டு சடலமாகக் காணப்பட்டுள்ளார்” என்று மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியைப் பார்வையிட உறவினர் யாரையும் வேலைக்கு அமர்த்தியவர்கள் அனுமதிக்கவில்லை. மாதத்தில் ஒருமுறை மாத்திரம் அவர், தனது உறவினர்களுடன் கதைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. சிறுமியின் உயிரிழப்பில் மர்மம் உள்ளது.” என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் துறையினர் மற்றும் தடயவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை தீடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.