யாழ். அச்சுவேலியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீச்சு ; பெண் படுகாயம்

யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு 09. 30 மணியளவில் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்டு, வீட்டில் இருந்த குடும்ப பெண் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பெண் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

முகங்களை கறுப்பு துணியால் மூடி கட்டியவாறு, இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் வீட்டினுள் அத்துமீறி நுழைத்து, ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி, வீட்டினுள் சென்று, அங்கிருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி பெற்றோல் குண்டு வீசியுள்ளனர்.

அதன் போது, வீட்டில் இருந்த மூன்று பிள்ளைகளின் தாயான 42 வயதான பெண்ணொருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சத்தம் கேட்டு கூடிய அயலவர்கள் காயமடைந்த பெண்ணை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் அச்சுவேலி பொலிஸாருக்கும் அறிவித்தனர்.

அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.