ரணிலின் இந்திய விஜயத்தில் கடன்மறுசீரமைப்புக்கு முக்கியத்துவம்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள்  சீராகி வரும் நிலையில், இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் மறுசீரமைப்பு குறித்து முக்கிய பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்த நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, சீனாவுடன் நேரடி பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்குடன் நிதி அமைச்சின் செயலாளரர்  பீஜிங் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்கிழமை (11)  நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த  இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

தேசிய கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் அதே சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் முதலாவது மீளாய்வு செப்டம்பரில் இடம்பெறவுள்ளது. இந்த மீளாய்வு மிக முக்கியத்துவமுடையதாகும்.

இதனை எதிர்கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்திருக்கின்றோம். அவற்றில் பிரதானமானது தேசிய கடன் மறுசீரமைப்பாகும். தற்போது இருதரப்பு கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் பிரான்ஸ்சுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது , பரிஸ் கழக செயலகத்தில் முக்கிய பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். இதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேபோன்று, அடுத்த வாரம் டில்லிக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தின் போதும் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கவுள்ளார்.

அத்தோடு, எமது முக்கிய கடன் வழங்குனர்களில் ஒரு நாடான சீனாவுடனும் நேரடி பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சின் செயலாளர் இந்த ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

வெற்றிகரமான வெளிநாட்டு கடன் வழங்குனர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கமைய செப்டெம்பரில் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நிறைவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கு காணப்படுகிறது. அதன் பின்னரே எமது பொருளாதாரம் படிப்படியாக அபிவிருத்தியடை ஆரம்பிக்கும் என்றார்.