ரணிலுக்கு சி.வி. ஆலோசனை

இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதம் வழங்காத பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தலாம் என,  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று(24) சந்தித்து பேசிய போது இதனை வலியுறுத்தியதாக கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கூறினார்.

மாகாண அரசிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த முன்மொழிவொன்றை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அது குறித்து ஆய்வுக்குட்படுத்த ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்து ஐந்து பேரின் பெயர்களையும் பரிந்துரைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

“இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதங்கள் இல்லாத பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆயுதங்களுக்கு பதிலாக தடிகளை மாத்திரமே கையில் வைத்திருப்பார்கள்.

ஆயுதங்கள் இல்லாது பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தேன். இந்த நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அக்கறையுடன் செல்படுவதை அவதானிக்க முடிகிறது” என்றார்.