ராஜகுமாரியின் வழக்கு: தீர்ப்புக்கு திகதி குறிப்பு

வெலிக்கடை பொலிஸாரின் காவலிலிருந்த போது உயிரிழந்த ஆர்.ராஜகுமாரி என்ற வீட்டுப் பணிப்பெண்ணின் மரணம் தொடர்பான நீதிவான் விசாரணையின் தீர்ப்பை வழங்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (26) திகதி நிர்ணயித்துள்ளது. அதன்படி ஓகஸ்ட் 25 ஆம் திகதி  தீர்ப்பு வழங்கப்படும்.

பதுளையைச் சேர்ந்த 41 வயதுடைய ராஜகுமாரி, தமக்குச் சொந்தமான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறி, அவரது  எஜமானரும்  பிரபல தயாரிப்பாளருமான சுதர்மா நெத்திகுமார செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், மே 11ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

பின்னர் வெலிக்கடை பொலிஸாரின் காவலிலிருந்தபோதே அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பில் அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பி அவர் தாக்குதலுக்கு உள்ளானதாக குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பான  வழக்கு இன்றைய தினம் (26)  கொழும்பு மேலதிக நீதி வான் ஹர்ஷன கெகுணாவல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  மெரில் ரஞ்சன் லமாஹேவா தலைமையிலான சாட்சிய விசாரணை நிறைவுற்றது. இந்நிலையிலேயே இந்த வழக்கின் தீர்ப்பு  ஓகஸ்ட் 25 ஆம் திகதி  அறிவிக்கப்படவுள்ளது.