ரோயல் பார்க் படுகொலை குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை நிறைவு செய்துள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.
ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரரான மகளிர் மற்றும் ஊடக ஒன்றியத்தால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இரு தரப்பினரதும் வாதங்களை கேட்டறிந்துகொண்ட மூன்று நீதியரசர்களைக் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை பின்னர் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த அமர்வு நீதியரசர்களான எஸ்.துரைராஜ், யசந்த கோட்டாகொட, ஜனக்க டி சில்வா ஆகியோர் அடங்கிய குழு முன்னிலையில் நடைபெற்றது.
2005ஆம் ஆண்டு ரோயல் பார்க் குடியிருப்புத் தொகுதியில் 19 வயதான ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
2012 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரணதண்டனை விதிக்கப்பட்ட அவருக்கு மைத்திரிபால சிறிசேன தனது ஜனாதிபதி பதவிக்காலத்தில் ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.