லிந்துலையில் லயன் குடியிருப்பில் 10 வீடுகள் தீக்கிரை

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை – இராணிவத்தை தோட்டத்தின் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இரவு ஏற்பட்ட தீ விபத்தால் 20 அறைகளைக்கொண்ட லயன் குடியிருப்பில் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளது.

மேலும், சில வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதனால் இந்த குடும்பங்களைச் சேர்ந்த 56 க்கும் மேற்பட்டோர்  நிர்க்கதியாகியுள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் நேற்றைய தினம் இரவு திடீரென தீ விபத்த  ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மக்கள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியில் வந்தனர். அதற்குள் தீ வேகமாக பரவியது.

பரவிய தீயை அதே தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள், லிந்துலை பொலிஸாருடன் இணைந்து சுமார் இரண்டு மணித்தியாலயங்களுக்கு பிறகு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீயினால் தோட்டத் தொழிலாளர்களின் தனிப்பட்ட உடமைகளும், வீடுகளில் வசித்த பிள்ளைகளின் பாடசாலை புத்தகங்கள் மற்றும் உபகரணங்களும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

தீயினால் பாதிக்கப்பட்ட உறவினர்களின் வீடுகளில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளதாக தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணங்கள் இதுவரை தெரியவில்லை என தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.