வடக்கு மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதி உட்பட அரசாங்கம் இந்தியாவுடன் முன்னெடுத்துள்ள விடயங்கள் தொடர்பாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை பொது மீனவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே தெரிவித்தார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
இந்திய மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு நாட்டின் வடக்கு கடல் சமுத்திரத்தை அழித்து வருகின்றனர்.அதனால் வடக்கு மீனவர்களுக்கு தங்களின் தொழிலை செய்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாங்கள் அரசாங்கத்துக்கு தெரிவித்து வந்திருக்கிறோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய விஜயத்தின்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் அழைத்துச்சென்றிருப்பதால், இந்திய மீனவர்களுக்கு எமது வடக்கு கடற்பரப்பில் மீன் பிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இரகசியமாக அனுமதிப்பத்திரம் வழங்கி இருக்கிறதா ? என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.
அதனால் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின்போது, இந்திய மீனவர்களை ஆக்கிரமிப்பது தொடர்பாக கலந்துரையாடிய விடயங்கள் என்ன என்ற விடயங்களை வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி செயலாகம், கடற்றொழில் அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சை கேட்கிறோம் என்றார்.
அதேவேளை, தெற்காசியாவில் இருக்கும் இயற்கை துறைமுகம் அமைந்திருக்கும் மற்றும் மிகவும் பெறுமதியான வளங்கள் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தை இந்தியாவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றின் ஊடாகவே வழங்க ஜனாதிபதி இந்திய விஜயத்தின்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
இந்த விடயம் பாராளுமன்றத்துக்கும் தெரியாது, அமைச்சரவைக்கும் தெரியாது. யாருக்கும் தெரியாமலே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது என பிரஜைகள் போராட்ட அமைப்பின் ஏற்பாட்டாளர் தர்ஷன தந்திரகே தெரிவித்தார்.