இன்று எம் தாயகமான வட-கிழக்கின் அனைத்துப் பிரதேசங்களிலும் மிக வேகமாக தினம் தினம் மரபுரிமை ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்று வருகின்றது. இதனை எதிர்கொள்ளச் சரியான பொறிமுறை ஒன்று அனைத்துத் தமிழ்த் தரப்புக்களும் இணைந்து மேற்கொள்வது அவசியமானது என ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் அமைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஞாயிற்றுக்கிழமை(13.08.2023) இரவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இவ்வாறு உருவாக்கப்படும் பொறிமுறையில் பல்கலைக்கழகச் சமூகத்தினது பங்களிப்பு புலமைசார் தளத்தில் அத்தியாவசியமானது. அதேபோன்று சட்டரீதியாகப் பிரச்சினைகளை எதிர்கொள்ளச் சட்டவாளர்களின் பங்களிப்பு இப்போது போன்று தொடர்ந்து கிடைப்பதுடன் அது அனைத்து பிராந்திய மட்டத்திலும் ஒருங்கிணைத்த நிபுணத்துவத்துடன் இருப்பது மேலும் பலம் சேர்க்கும்.
தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக உள்ளிட்ட உயர் கல்வி மாணவர்கள் மேலும் வீச்சாகப் போராட்டங்களை மக்கள் சார்ந்தாக ஒழுங்கமைக்க வேண்டும். அரசியலாளர்கள் தொடர் அழுத்தத்தை அரசுக்கு வழங்குவதுடன் நாடாளுமன்றத்தைப் புறக்கணித்தல் உட்பட ஒத்துழையாமை இயக்கத்திற்குத் தயாராக வேண்டும்.
பன்னாட்டு மற்றும் இந்திய அரசின் கவனத்தை மேலும் ஈர்த்து இந்தப் பாரிய பௌத்த மேலாண்மையைத் திணிக்கும் பூர்வீகத் தமிழர்களின் சிவ வழிபாட்டு இடங்களை மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்துத் தரப்பினரும் ஒட்டுமொத்தமாக எம்முள் இருக்கும் அனைத்து வேறுபாடுகளையும் களைந்து முன்வருவோம்.
அமைப்புசார் நிலையில் இயங்கும் நாம் அனைவரும் எம் அமைப்புக்ளின் தனித்துவங்களை பேணும் அதே நேரம் எம் மக்களின் ஒட்டுமொத்த நலனுக்காக இருப்பை இத்தீவில் நிலைநிறுத்தவதற்காக ஒருங்கிணைந்த கட்டமைப்பாகச் செயற்பட இந்த தீர்க்கமான தருணத்தில் அழைப்பு விடுகின்றோம். அதேநேரம் இந்தப் பிரச்சினையை இதயசுத்தியோடு அணுகி அரசு தீர்க்கத் தவறின் இந்த தீவில் இனங்களிற்கிடையே சமாதான சகவாழ்வு தொடர்ந்து கேள்விக்குறியாகி நாட்டின் எதிர்காலம் அதலபாதாளத்திற்குச் செல்லும் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றோம்
தமிழர்களின் தலைகளை களனிக்கு கொண்டு வருவேன் எனப் பகிரங்கமாக கூறும் அளவிற்கு வந்துள்ள அரசியலாளர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதும் தமிழரின் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக மிக மோசமான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அரசு உடனடியாக முன்வர வேண்டும்.
இவற்றைச் செய்யத் தவறின் தமிழர் நாம் தொடர் சாத்வீகப் போராட்டங்களிற்கும் ஒத்துழையாமை இயக்க முன்னெடுப்புகளிற்கும் தள்ளப்படுவோம் என இந்தச் சந்தரப்பத்தில் அரசிற்கு ஆழமாக வலியுறுத்துகின்றோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.