வண்ணாத்திவில்லு பகுதியில் மரை இறைச்சியுடன் ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்

வண்ணாத்திவில்லு எலுவாங்குளம் இறால்மடு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் மரை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் இருவர் தப்பியோடியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

மரை இறைச்சியை சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக வண்ணாத்திவில்லு வனஜீவராசிகள் திணைக்கள வலைய உதவிப் பொறுபதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைதாகினர் .

இதன்போது சுமார் 75 கிலோகிராம் மரை இறைச்சி கைப்பற்றப்பட்டதாகவும், இறைச்சியை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன கைப்பற்றப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

குறித்த விலங்கு இறைச்சிக்காக தப்போவ சரணாலயத்தில் வேட்டையாடப்பட்டதாக சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டபோது தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் எலுவாங்குளம் இறால்மடு பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவரென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரி எம்.பி.எல்.எஸ் மாரசிங்ஹ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று வெள்ளிக்கிழமை (11)  மாலை புத்தளம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் எதிர் வரும்  16ம் திகதி வரை விளக்கமரியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது .