வலிகாமம் வடக்கில் சொந்த இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்த நடவடிக்கை

வலிகாமம் வடக்கில் தமது சொந்த இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக் குடியமர்த்தும் நோக்கில் விசேட கூட்டம் நேற்றுப் புதன்கிழமை(16.08.2023) தெல்லிப்பழைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ தலைமையில் இடம்பெற்றது.

மேற்படி விசேட கூட்டத்தில் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி) க.ஶ்ரீமோகனன், மாவட்டச் செயலகப் பிரதம கணக்காளர் இ.சிவரூபன், தெல்லிப்பழைப் பிரதேச செயலகப் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் மற்றும் மீள்குடியேற்றப் பணிகளுடன் தொடர்புபட்ட அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வலிகாமம் வடக்கில் தமது சொந்த இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக் குடியமர்த்துவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் மீளக்குடியேறும் மக்களுக்கு வீட்டுத் திட்டம் உட்படப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவது தொடர்பிலும் இதன்போது விரிவாக ஆலோசிக்கப்பட்டது.