அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் கிழக்கு முஸ்லிம்களும்,வடக்கு தமிழர்களும் காணி உரிமைக்காக மரண போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
ஆகவே 13 நடைமுறைப்படுத்தினால் இருக்கும் தேசிய நல்லிணக்கம் இல்லாமல் போகும் என தேசிய சுதந்திர முன்னணியின் பிரச்சார செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.
எதுல்கோட்டை பகுதியில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (25) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ,சுமந்திரன் உட்பட தமிழ் பிரிவினைவாதிகள் குறிப்பிட்டுள்ள நிலையில் இவ்விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை உறுதியாக குறிப்பிடாமல் தேசிய மக்கள் சக்தி தலைமறைவாகிவிட்டது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் டில்வின் சில்வாவின் நிலைப்பாட்டுக்கும், அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரியவின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.
இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் வாக்குகளை கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தம் என்ற அரசியல் பிரசாரத்தை கையில் எடுத்துள்ளார். அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முழுமையான ஒத்துழைப்பு வழங்குகிறார்கள்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் மக்களாணை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடையாது.நாட்டு மக்கள் இனிவரும் காலங்களிலும் அவருக்கு ஆணை வழங்க போவதில்லை. நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் நாட்டை பிளவுப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஜனாதிபதி தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
நாட்டு மக்களின் வாழும் மற்றும் வாழ்க்கை தரத்தை உறுதி செய்து விட்டு தேசிய நல்லிணக்கத்தை ஸ்தாபிக்கலாம். நாட்டை பிளவுப்படுத்துவதால் எவ்வாறு தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்படும்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் கிழக்கில் வாழும் முஸ்லிம்களும், வடக்கில் வாழும் தமிழர்களும் காணி உரிமைகளுக்காக மரண போராட்டத்துக்கு செல்லும் அளவுக்கு முரண்பட்டுக் கொள்வார்கள். ஆகவே 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தினால் இருக்கும் நல்லிணக்கமும் இல்லாதொழியும் என்றார்.