20 குடும்பங்களை விரைவில் குடியேற்றுமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று  திங்கட்கிழமை (24)  நால்வர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியின் ஓரத்தில் கைவேலிப் பகுதியில் தகர கொட்டகை ஒன்றை அமைத்து அவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.“நாங்கள் வாழ்ந்த இடத்தில் எங்களை மீளக் குடியேற்றுங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்து  இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெறுகின்றது.

இவ் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ரவிச்சந்திரன் உதயச்சந்திரன் மூன்று அங்கத்தவர்களை கொண்ட குடும்பத் தலைவர், யோகேஸ்வரன் மயூரன் மூன்று அங்கத்தவர்களை கொண்ட குடும்பத் தலைவர், கணபதி கதிர்க்கீரன் எட்டு அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பத்தின் அங்கத்தவர், கோவிந்தன் பிரசாந்தன் மூன்று அங்கத்தவர்களை கொண்ட குடும்பத் தலைவர்ஆகியோர் தங்கள் 20 குடும்பங்களை விரைவில் குடியேற்றுமாறு கோரி இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவேலி பகுதியில் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு குறித்த பகுதியில் 45 குடும்பங்கள் குடியேறி இருந்தனர். இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு வந்தபோது குறித்த பகுதியை விட்டு மக்கள் சென்ற பின்னர் குறித்த பகுதியில் இருந்த குடும்பங்கள் மீள்குடியேற்றம் வரவில்லை பலர் உயிரிழந்தும் வேறு சிலர் வேறு இடங்களில் குடியேறிவிட்டனர்.

இவ்வாறான நிலையில் குறித்த கிராம மக்கள் 2012 ஆம் ஆண்டு கைவேலி பகுதியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட போது குறித்த பகுதியை வனவள திணைக்களம் எல்லைக் கற்கள் இட்டு வனப்பகுதியாக்கி விட்டனர்

இவ்வாறான பின்னணியில் மக்கள் வாழ்ந்த வீடுகள், கட்டுக் கிணறுகள், கட்டடங்கள், பயன்தரு மரங்கள் உள்ள கைவேலி பகுதியில் காணிகள் வீடுகள் அற்ற சுமார் 20 குடும்பங்கள் பலகாலமாக குடியேறி வாழ முயற்சித்து வந்த அங்கு சென்று கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

இந்நிலையில், அண்மையில் குறித்த பகுதிக்குச் சென்ற வனவள திணைக்கள அதிகாரிகள் அங்கு மக்கள் போட்ட கொட்டில்களை அகற்றி கொழுத்துவதற்காக மண்ணெண்ணையுடன் வருகை தந்ததாகவும் பெண்கள் தனிமையில் இருந்த கொட்டில்களில் சென்று முன்னாள் போராளியான பெண் ஒருவர் மீதும் ஆண் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில் தமது நிலத்தில் 20 குடும்பங்களை விரைவில் குடியேற்றுமாறு கோரி இப்போராட்டம் இடம்பெற்று வருகிறது.