சர்வதேச பல்கலைக்கழகங்கள் மூன்றின் கிளைகளை இலங்கையில் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் இரு பல்கலைக்கழகங்கள் இதற்கு இணக்கம் தெரிவிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
அத்தோடு பல்கலைக்கழகங்களுக்குள் அரசியல் செயற்பாடுகள் முற்றாக தவிர்க்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த அவர் , கல்வியுடன் தொடர்புடைய எந்தவொரு கோரிக்கை குறித்தும் மாணவர்களுடன் கலந்துரையாட தாம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
இலங்கையின் கல்வி முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போதைய உயர் கல்வி முறைமையில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக 15 000 மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உயர்தரத்துக்கு தோற்றும் 3 இலட்சத்துக்கும் அதிகமான மாணவர்களில் சுமார் 11 சதவீதமானோர் மாத்திரமே பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றனர்.
எவ்வாறிருப்பினும் உயர் கல்வியை தொடர விரும்பும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே அதற்குரிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.
அதற்கமைய உலகின் 3 பிரதான சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை இலங்கையில் அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றில் இரு பல்கலைக்கழகங்கள் இணக்கம் தெரிவிக்கும் என்று நம்புகின்றோம். அதே போன்று மேலதிக வகுப்புக்கள் தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பல்கலைக்கழகங்களுக்குள் அரசியல் செயற்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டியவையாகும். எவ்வாறிருப்பினும் 18 வயது பூர்த்தியான எந்தவொரு பிரஜைக்கும் தாம் விரும்பும் அரசியலில் ஈடுபடுவதற்கான உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பல்கலை மாணவர்கள் கல்வி தொடர்பில் எந்தவொரு கோரிக்கைகளை முன்வைத்தாலும் , அவை குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு எந்த சந்தர்ப்பத்திலும் நாம் தயாராக இருக்கின்றோம்.
மாறாக சர்வதேச நாணய நிதியம் வேண்டாம் என்றோ , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என்றோ கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டால் அதற்கு எம்மால் பதிலளிக்க முடியாது என்றார்.