35 வயதுக்கு மேற்பட்டவர்களின் சுகாதார நிலைமையை உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்பொன்றை தயாரிக்க நடவடிக்கை

நாட்டில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் சுகாதார நிலைமையை உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,  கிராமிய வைத்தியசாலைகளை அடிப்படையாகக்கொண்டு இந்த வேலைத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஆரம்ப சுகாதார சேவை வலுவூட்டல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார்.

நாட்டு மக்களின் சுகாதார கட்டமைப்பை உயர்த்துவதற்காக ஆரம்ப சுகாதார சேவை வலுவூட்டல் பிரிவு முன்னெடுத்துவரும் வேலைத்திட்டம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் 35 வயதுக்கு மேற்பட்டவர்களின் சுகாதார நிலைமையை உள்ளடக்கிய தரவுக்கட்டமைப்பொன்றை தயாரிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிராமிய வைத்தியசாலைகளை மையமாகக்கொண்டு இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் வேலைத்திட்டம் தற்போது 600 வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் கிராம சேவையாளர்கள் பிரிவுகளில் வசிக்கும் சிலரை ஒரு வைத்தியசாலைக்கு பரிந்துரைத்து, அவர்களின் சுகாதார நிலைமை குறித்து ஆராயப்படுகிறது.

அனைவரதும் சுகாதார தரவுகளையும் வெவ்வேறாக பிரித்து தரவு கட்டமைப்பில் உள்ளடக்கி நோய் நிவாரண வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட இருக்கிறது.

இதன்போது இரத்த அழுத்தம் எந்த மட்டத்தில் உள்ளது. கொலஸ்ட்ரோல் எந்த மட்டத்தில் உள்ளது. உயரம் மற்றும் நிறைக்கேற்ப நிறைச் சுட்டென் சரியாக உள்ளதா என்ற அடிப்படையில் ஆராய்ந்து அதில் மிகவும் அபாய மட்டத்தில் இருக்கும் பகுதியினருக்கு கட்டாயமாக அவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் இலங்கை மக்கள் சுகாதார ரீதியில் பாதிக்கப்படாமல்  தமது சுகாதார சேவைகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார்.