தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம்,
அரசுக்குச் சொந்தமான பல்வேறு முயற்சியாண்மைகளை தனியார்மயமாக்கத் தயாராகி வரும் நேரத்தில், தனியார் நிறுவனமொன்றின் 5 பில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை அரசாங்கத்துடன் தொடர்பான நிதி நிறுவனம் கொள்வனவு செய்வது பிரச்சினைக்குரிய விடயம் என்றும், தேர்தலுக்குக் கூட நிதியில்லாத அரசாங்கம், யாரோ ஒருவருக்குக் கமிசன் பெற்றுக் கொடுப்பதற்காக இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கிறதா அல்லது இது மற்றுமொரு பிணைமுறி மோசடியா என சந்தேகம் எழுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (7) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் வங்கியின் துணை நிறுவனமான பீப்பிள்ஸ் லீசிங் நிறுவனம், First Capital Holdings கம்பனியின் 33 சதவீத பங்குகளை ஜனசக்தி நிறுவனத்திடமிருந்து 5 பில்லியன் ரூபாவிற்கு கொள்வனவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அண்மையில் கொழும்பு பங்குச் சந்தை அறிவிப்பு விடுத்துள்ளதாகவும்,
133 மில்லியன் பங்குகள் ஒரு பங்கு 37 ரூபா 10 சதத்திற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக கூறும் அரசாங்கம், மக்களின் பணத்தைப் பயன்படுத்தி தனியார் நிறுவனப் பங்குகளை வாங்குவது தொடர்பாக சந்தேகம் எழுவதாகவும்,
இவ்வாறு முதலீடு செய்வதன் நோக்கம் என்ன என்று தான் கேள்வி எழுப்புவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.