இலங்கையின் பிரபல பொருளாதார நிபுணரான அமல் எரான் ஹேரத் சந்தரத்ன கொழும்பு பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பு 7, ரொஸ்மீட் பிளேஸிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7 ஆவது மாடியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (23) விழுந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து பலத்த காயங்களுக்குள்ளான அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
47 வயதான பொருளாதார நிபுணரான அமல் எரான் ஹேரத் சந்தரத்ன நுண்பாக பொருளியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் பிரான்டியர் ரிசர்ச்சின் நிறுவுனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு, தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. குறித்த மரணம் தற்கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.