ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரியுங்கள்!

தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரிக்கும் அதேவேளை, அவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை ஆதரிக்கவேண்டும் என்று விரிவான கடிதமொன்றின் ஊடாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இந்தியப்பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 20 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ள நிலையில், தமிழர் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வையே இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தவேண்டும் என்ற கோரிக்கையுடனான கடிதத்தை பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி திங்கட்கிழமை (10)  யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்துக்குப் பொறுப்பான அதிகாரி ராகேஷ் நட்ராஜனிடம் கையளித்துள்ளது. அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

பிரித்தானியரிடமிருந்து சுதந்திரமடைந்ததன் பின்னர் நாடு மிகமுக்கியமான காலகட்டத்தில் இருக்கின்ற வேளையில், இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயம் இடம்பெறுகின்றது. சுதந்திரத்தின்பின் தற்போது இலங்கைக்கு மீண்டுமோர் புத்துணர்வுடன்கூடிய தொடக்கம் அவசியமாக இருப்பதனாலேயே இது முக்கியத்துவம் பெறுகின்றது.

கடந்த 75 வருடகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த பொதுவான கொள்கைகளும், தீர்வுகாணப்படாத இனப்பிரச்சினையுமே தற்போது இலங்கை பொருளாதார ரீதியில் மாத்திரமன்றி, அரசியல் ரீதியிலும் வங்குரோத்து நிலையை அடைவதற்கு வழிவகுத்திருக்கின்றன.

ஆகவே நாட்டின் எதிர்காலம் சிறப்பானதாக அமையவேண்டுமாயின், கொள்கைகளிலும் மாற்றம் ஏற்படுத்தப்படவேண்டியது அவசியமாகும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ‘ஒற்றையாட்சி (ஒருமித்த) அரசுக்கட்டமைப்பு’ ஓர் முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து தமிழ் மக்கள் அதனை நிராகரித்திருப்பதுடன், ஒற்றையாட்சி அரசுக்கட்டமைப்பு நடைமுறையில் உள்ள வரையில் அர்த்தமுள்ள சுயநிர்ணய உரிமையையோ அல்லது சுயாட்சியையோ வென்றெடுக்கமுடியாது என்பதே அதற்கான காரணமாக இருந்தது.

13 ஆவது திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டு 36 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அது அறிமுகப்படுத்தப்பட்டபோது இருந்ததைவிட தற்போது நிலைவரம் மிகமோசமடைந்துள்ளது.

தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வாக அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்திய தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது.

ஆனால் இத்திருத்தத்தின் அமுலாக்கம் குறித்து உயர்நீதிமன்றத்தை நாடும் சந்தர்ப்பங்களில் எல்லாம், அதன் தீர்ப்பு அதிகாரப்பகிர்வுக்கு எதிரானதாகவே அமைந்திருக்கின்றது. அதேபோன்று 13 ஆவது திருத்தத்தை பேச்சுவார்த்தைகளுக்கான தொடக்கமாகத் தமிழ்மக்கள் கருதுவதில் அரசியல் ரீதியான ஆபத்து இருக்கின்றது.

13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் தமிழ்மக்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற சட்டபூர்வமான நிலைப்பாட்டை இலங்கை அரசு எடுக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலவுகின்றது.

ஆகவே தான் நாம் பேச்சுவார்த்தைகளுக்கான தொடக்கப்புள்ளியாகக்கூட 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கின்றோம்.

இவ்வாறானதொரு பின்னணியில் அண்மையகாலங்களில் இலங்கையை மீட்டெடுப்பதற்கு இந்தியா முன்வந்ததன் மூலம், சிங்கள மக்கள் மத்தியில் இந்தியா நன்மதிப்பைப் பெற்றிருக்கின்றது.

ஆகவே ஒற்றையாட்சிக் கட்டமைப்பின் கீழான எந்தவொரு முன்மொழிவையும் நிராகரிக்கும் எமது தமிழ்மக்களுக்கு இந்தியா ஆதரவளிக்கவேண்டும் என்றும், தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய சமஷ்டி முறையிலான அரசியலமைப்பை ஆதரிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.