அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்தின் அடிப்படையில் அர்ச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் குமாரவயலூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தின் கீழ் ஜெயபாலன், பிரபு ஆகியோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்களின் நியமனத்தை ரத்து செய்து, அதே கோயிலில் நீண்ட நாட்கள் பணிபுரியும் தங்களை அர்ச்சகர்களாக நியமிக்கக்கோரி கார்த்திக், பரமேஸ்வரன் ஆகியோர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை கடந்த மார்ச் மாதம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து, குமாரவயலூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் காமிக ஆகம விதிப்படி நடைபெறும் கோயிலாகும். இந்த கோயிலில் ஆதி சைவர்கள், சிவாச்சாரியார்கள், குருக்கள் மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்க முடியும். இந்த ஆகம விதியை பின்பற்றும் கோயில்களில் பிராமணர்களில் ஒரு பிரிவினர் கூட கருவறைக்குள் நுழைய முடியாது.
அர்ச்சர்களாக நியமிக்கப்பட்ட இருவரும் ஆதி சைவர்கள், சிவாச்சாரியர்கள், குருக்கள் இல்லை. இதனால் அவர்களை காமிக ஆகம கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது. அவர்களின் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்களை அர்ச்சகர்களாக நியமிக்க 8 வாரங்களில் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்யவும், தடை விதிக்கவும் கோரி இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் மற்றம் ஆணையர் தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், இந்து சமய அறநிலைத்துறை சட்டப்படியும், உயர் நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் படியும் மனுதாரர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். கோயில்களில் ஆகம பூஜைகள் செய்பவர்கள் குறிப்பிட்ட சாதி அடிப்படையில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படவில்லை என்பதையும் நீதிபதி கவனிக்க தவறிவிட்டார். இரு அர்ச்சகர்களும் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள்.
ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோயில்களில் பூஜைகள் செய்ய பிராமண சிவாச்சாரியார்கள் மட்டுமே தகுதியானவர்கள் என ஆகமங்களிலும், எந்த விதிகளிலும் கூறப்படவில்லை. ஆதி சைவ சிவாச்சாரியார் சங்க வழக்கில் உச்சநீதிமன்ற வழக்கின் உத்தரவை தனி நீதிபதி கவனிக்க தவறி விட்டார் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. பின்னர் தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்தும், அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டும் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.