கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீ்டு, கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீடு உட்பட 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, தற்போது அவர் நீதிமன்றக் காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கரூர் ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் வீடு, செங்குந்தபுரத்தில் உள்ள அவரது நிதி நிறுவனம், கரூர் சின்ன ஆண்டாங்கோவில் சாலையில் உள்ள கிரானைட் நிறுவன உரிமையாளர் பிரகாஷ் வீடு, அவரது கிரானைட் நிறுவனம், செங்குந்தபுரத்தில் மற்றொரு நிறுவனம் என 5 இடங்களில் துணை ராணுவத்தினரின் பாதுகாப்புடன் அமலாக்கத் துறை அதிகாரிகள் 2-வது முறையாக நேற்று சோதனை நடத்தினர். இதில், சங்கரின் வீட்டில் இருந்து 2 பைகளில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இதேபோல, கோவை ராமநாதபுரம் மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் முத்துபாலன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
திருச்சி சாலையில் உள்ள அருண் அசோசியேட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் வீட்டிலும் நேற்று காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இது, கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தினருக்கு புதிதாக பங்களா கட்டிக் கொடுத்து வரும் நிறுவனம் என்று கூறப்படுகிறது. இந்த சோதனை மாலை வரை நீடித்தது.
செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு திமுக ஒன்றியச் செயலாளர் வீரா.சாமிநாதனின் வீடு, அலுவலகம், பண்ணை இல்லத்தில் நேற்று முன்தினம் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்கரா நகர் ராஜாஜி தெருவில் உள்ள இவரது உறவினர் டயர் மணி (எ) காளியப்பன் வீட்டில் 12 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் சாலையில் உள்ள அவரது அலுவலகத்திலும் ஆய்வு நடத்தப்பட்டது.