அழியும் நிலையில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களை வரைந்து ஆவணப்படுத்தி வரும் கோவை ஓவியரை, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.
வானொலியில் நேற்று ஒலிபரப்பான மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், “பலமுறை நாம் சூழலியல், தாவரங்கள், விலங்குகள், உயிரிப் பன்முகத்தன்மை போன்ற சொற்களைக் கேட்கும்போது, இது ஏதோ தனிச்சிறப்பு வாய்ந்த விஷயங்கள் என்று நினைக்கிறோம். ஆனால், அப்படி கிடையாது. நாம் உண்மையிலேயே இயற்கையின் மீது நேசம் கொண்டவர்கள் என்றால், நாம் சிறிய, சிறிய முயற்சிகளைக் கூட மேற்கொள்ளலாம். தமிழ்நாட்டில் வடவள்ளியைசேர்ந்த ஒரு நண்பரான சுரேஷ் ராகவன், அழியும் நிலையில் உள்ள பல்வேறு தாவரங்கள், விலங்குகளின் ஓவியங்களைத் தீட்டி அவற்றை ஆவணப்படுத்தியிருக்கிறார். கலையின் வாயிலாக இயற்கைக்குச் சேவை புரியும் இவரது பணி உண்மையிலேயே அற்புதமானது”என்று குறிப்பிட்டார்.
கோவை வடவள்ளி அருகே பி.என்.புதூர், புதிய ஆனந்த நகரைச் சேர்ந்த ஆர்.சுரேஷ் (59), தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள, இந்திய தாவரவியல் ஆய்வு மையத்தில் (பிஎஸ்ஐ) ஓவியராக பணிபுரிகிறார். தனது கலையின் மூலம் ஓரிடவாழ் (எண்டெமிக்), அழியும் நிலையில் (எண்டேஞ்சர்டு) உள்ள பறவைகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்ல ஆவணப்படுத்த எண்ணி, 2018 முதல் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள அரியவகை பறவைகள், விலங்குகள், தாவரங்களை வரைந்து ஆவணப்படுத்தி வருகிறார்.
பிரதமரின் பாராட்டு குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சுரேஷ் கூறியதாவது: மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள 30 ஓரிடவாழ் பறவைகள், 18 வகை விலங்குகள், 126 ஓரிடவாழ் தாவரங்கள், இந்திய அளவில் 50 ஓரிடவாழ் பறவைகள், 46 வகை விலங்குகள், இந்திய அளவில் அழியும் நிலையில் உள்ள 12 வகை பறவைகளை வரைந்து ஆவணப்படுத்தியுள்ளேன். வரையும்போது, பறவை இறகுகளின் நிறம், விலங்குகளின் தோல் நிறம், தாவரங்களின் தோற்றம் ஆகியவை எந்த விதத்திலும் மாறுபடக்கூடாது என்பதால், ஒவ்வொரு உயிரினம், தாவரத்தின் புகைப்படங்களை பல்வேறு கோணங்களில் சேகரித்து வரைந்து வருகிறேன்.
இதற்காக சனி, ஞாயிறுகளில் தினமும் 8 முதல் 10 மணி நேரம் வரை செலவிடுகிறேன். நிபுணர்கள் பார்த்தவுடன் அதன் வகையை உறுதியாக தெரிந்துகொள்ளும் வகையில் மிக நுணுக்கமாக இருக்க வேண்டும் என்பதால், ஒவ்வொரு ஓவியத்தையும் வரைந்து முடிக்க சுமார் 3 முதல் 4 நாட்கள் ஆகும். தாவரங்களை வரைவது இன்னும் சிரமமானது. இலையின் முன்பக்கம் ஒரு தோற்றத்திலும், பின்பக்கம் வேறுமாதிரியும் இருக்கும்.
மிகச் சிறிய தாவரங்களின் படங்களை நுண்ணோக்கி கொண்டு தோற்றத்தை பெரிதுபடுத்திப் பார்த்து வரைந்திருக்கிறேன். வரைவதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு பறவைகள், உயிரினத்தின் தமிழ், ஆங்கில பெயர்கள், அறிவியல் பெயர், அவை வாழுமிடம் ஆகிய தகவல்களையும் நிபுணர்களின் உதவியுடன் சரிபார்த்து ஓவியங்களோடு அந்த தகவல்களையும் அச்சிட்டுவைத்துள்ளேன். என்னைப்போன்ற சாதாரண ஓவியரின் பணிகளை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டி பிரதமர் பாராட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது வார்த்தைகள் உத்வேகம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.