ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்துக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் 2021-ல் அகழாய்வுப் பணி தொடங்கியது. இங்கு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கும் பணிக்கு நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டிவைத்து, இந்தியாவிலேயே முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள சைட் மியூசியத்தை திறந்துவைத்தார். ஆதிச்சநல்லூரில் இரு இடங்களில் அகழாய்வு நடைபெற்ற குழிகளுக்கு மேல் கண்ணாடித் தளம் அமைத்து, அங்கு கிடைத்த பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விழாவில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: நாட்டில் உள்ள பழமையான பகுதிகளின் தொன்மையையும், சிறப்பையும் அகழாய்வுகள் மூலம் வெளியே கொண்டு வருகிறோம். பழமையான நாகரிகங்கள் இருந்த 5 இடங்களில் அகழாய்வு மேற்கொண்டு, அங்கு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
ஏறத்தாழ 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருட்கள் இங்கு கிடைத்துள்ளன. இங்கிருந்து பெர்லின், நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட தொல்லியல் பொருட்களை மீண்டும் இங்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு காட்சிப்படுத்தப்படும் தொல்லியல் பொருட்கள் குறித்த விவரங்களை செல்போன் மூலம் மக்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏதுவாக க்யூஆர் கோடு வசதியை ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். அதேபோல, இங்கு திறந்தவெளி டிஜிட்டல் திரை அமைத்து, பழங்கால சமூகத்தின் தொன்மையை விளக்கும் ஒலி-ஒளிக் காட்சிகளுக்கும் ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்தின் மீது பிரதமருக்கு தனி அக்கறை உள்ளது. ‘சுதேஷ் தர்ஷன்’ என்ற பெயரில் 15 சுற்றுலாத் திட்டங்கள் தயாரிக்கப்பட் டுள்ளன. நாட்டின் பாரம்பரியம் மற்றும் தொல்லியல் தளங்களைப் பாதுகாக்கும் வகையில், 77 திட்டங்களை செயல்படுத்த ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காஞ்சிபுரம், வேளாங்கண்ணி உள்ளிட்ட 12 பாரம்பரிய நகரங்களை மேம்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
தொல்லியல் தளங்களை தனியார் தத்தெடுத்து மேம்படுத்தும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளோம். ஒவ்வொரு மாநிலத்தின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், டெல்லியில் 1.17 லட்சம் சதுரமீட்டர் பரப்பில் பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
சுதந்திரப் போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கை விளக்கும் வகையில், பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 10 மாநிலங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன. 3.3 லட்சம் ஓலைச்சுவடிகளை மின்னணு முறையில் பதிவேற்றம் செய்து, 3 கோடி பக்கங்களாக உருவாக்கி உள்ளோம். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
தமிழக மீன்வளம் மற்றும் கால்நடைத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., மத்திய தொல்லியல் துறை இயக்குநர் ஜெனரல் கிஷோர்குமார் பாசா, இணை தலைமை இயக்குநர் எஸ்.கே.மஞ்சுல், திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.