ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையை விட்டு நீக்குவதாக ஆளுநர் சமீபத்தில் அறிவித்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையீட்டால் அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அன்றிரவே முதல்வருக்கு ஆளுநர் கடிதம் எழுத பரபரப்பு அடங்கியது.
அப்போது, அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெற்று அதன் அடிப்படையில் செயல்படுமாறு ஆளுநருக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார். இதையடுத்து அதற்கான முயற்சியில் ஆளுநர் இறங்கினார். இந்நிலையில், ஆளுநருக்கு தமிழக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கடிதம் எழுதியிருந்தார். அதில் நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கும்படியும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கும்படியும் கேட்டிருந்தார்.
ஆனால், இதற்கான கோப்புகள் வரவில்லை என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மறுத்த சட்ட அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகையில் கோப்புகளை பெற்றுக் கொண்டு ஒப்புதல் அளித்தற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். இந்தச்சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் – திமுக அரசு இடையே பனிப்போர் முற்றிவரும் நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசு தலைவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 பக்கம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக டெல்லியில் முகாமிட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். வரும் நாட்களில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி ஆகியோரை சந்தித்து செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.