சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.27 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும் என்று கூறப்பட்டது.
ஆனால் 15 ஆண்டுகளாகியும் பணிகள் இன்னும் முடிவடையாமலேயே உள்ளன. இதற்கிடையே ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ள உலக வங்கியிடம் கடன் பெற திட்டமிடப்பட்டுள்ளன. விடுபட்ட இடங்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே ரூ.93 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. 182.55 லட்சம் குடிநீர் திட்டப்பணிக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.269 கோடியில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு இருக்கிறது.
இதுபோன்ற திட்டப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக பொதுமக்களிடம் கலந்து ஆலோசிப்பதற்காக சிறப்பு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது. ஆவடி மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது குமுறலை வெளிப்படுத்தினர். ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தரணிதரன் கூறும்போது, அனைத்து துறைகளுடன் ஆலோசனை நடத்தி ஒருங்கிணைப்பு குழு ஒன்றை அமைக்க வேண்டும். குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்துக்கு பொதுமக்கள் ஏற்கனவே டெபாசிட் தொகை செலுத்தி உள்ளனர்.
அந்த தொகைக்கு வட்டி தர வேண்டும், அல்லது குறிப்பிட்ட காலத்துக்கு வீட்டு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பட்டாபிராமை சேர்ந்த ஜெயக்குமார் கூறும்போது, குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்துக்கு நான்தான் முதலில் பணம் கட்டினேன். அதற்கான பலனை நான் இன்னும் பெறவில்லை. இந்த பணத்தை வங்கியில் கட்டியிருந்தால் வட்டியாவது கிடைத்திருக்கும் என்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய பொதுமக்கள் பலர் ஆவடி நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் உள்ளது. இதனால் குக்கிராமங்களில் வாழ்வது போன்று வாழ்கிறோம் என்று குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் தர்ப்பகராஜ் கூறும்போது, ஏற்கனவே கட்டணம் செலுத்தியவர்களுக்கு வீட்டு வரி செலுத்துவதில் இருந்து சலுகை அளிக்க முடியுமா? என்பது பற்றி ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். ஆவடி பகுதியில் அடிப்படை வசதிகளை விரைந்து முடித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.