“எங்களை அழிக்க நினைக்காமல் திமுகவை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” – மதுரை அதிமுக மாநாட்டில் இபிஎஸ்

“அதிமுகவை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதிமுக மாநாடு: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு அக்கட்சியின் முதல் மாநில மாநாடு மதுரை அருகே வலையங்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு மதுரையில் நடக்கும் இந்த மாநாட்டுக்கு ’அதிமுக வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு’ எனப் பெயரிட்டு இருந்தனர். தமிழகம் முழுவதும் இருந்து இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதனால், மாநாடு நடந்த ‘ரிங்’ ரோடு மட்டுமில்லாது மதுரையே திருவிழா போல் காணப்பட்டது. வாகனங்களில் வந்த தொண்டர்களால் மதுரை புறநகர் பகுதியில் ஒட்டுமொத்த போக்குவரத்தும் ஸ்தம்பித்தது.

காலை திட்டமிட்டப்படி மாநாட்டு நுழைவு வாயிலில் 51 அடி கொடி கம்பத்தில் பொதுச்செயலாளர் பழனிசாமி அதிமுக கொடியேற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைத்தார். அதன்பிறகு நிர்வாகிகள், தொண்டர்கள் வழங்கிய வரவேற்பை ஏற்றுக் கொண்டார். தொடர்ந்து மாநாட்டு பந்தலை திறந்து வைத்து, அதிமுகவின் 51 ஆண்டு கால வரலாற்று புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டு சென்றார். அதன்பிறகு நிர்வாகிகள், தொண்டர்களை மகிழ்விக்க மாலை வரை மேடையில் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வறு நிகழ்ச்சிகள் நடந்தது. மாலை 4.30 மணியளவில் மீண்டும் மேடைக்கு வந்த பழனிசாமி தலைமையில் மாநாடு தொடங்கியது.

மாநாட்டு பொறுப்பாளர்களும், முன்னாள் அமைச்சர்களான செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார், அமைப்பு செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் வரவேற்று பேசினர். அவர்களை தொடர்ந்து தலைமை நிலையை செயலாளர் எஸ்பி.வேலுமணி, பொருளாளர் திண்டுக்கல் சி.சீனிவாசன், துணைப்பொதுச்செயலாளர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், மூத்த தலைமை கழக நிர்வாகிகள் பேசினர். அவர்களை தொடர்ந்து அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணைப்பொதுச்செயலாளர் கேபி.முனுசாமி ஆகியோர் பேசினர்.

‘புரட்சி தமிழர்’ பட்டம்: அதன்பிறகு மாநாட்டில் சர்வ சமய பெரியவர்கள் சார்பில் ‘புரட்சி தமிழர்’ என்ற பட்டம் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இலக்கிய அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், ‘‘இனி இந்த பட்டத்தில்தான் அவரை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுச்செயலாளர் பழனிசாமியை அழைக்க வேண்டும், குறிப்பிட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

அதிமுகவை அழிக்க முடியாது… – மாநாட்டில் நிறைவு உரையாக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: ‘புரட்சி தமிழர்’ பட்டம் எனக்கு வழங்கிய சமய பெரியவர்கள், கட்சி முன்னோடி நிர்வாகிகளுக்கும், மாநாட்டிற்கு வருகை தந்த நிர்வாகிகள், தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுக ஒரு மாபெரும் இயக்கும். தமிழகத்திலே மிகப்பெரிய கட்சி அதிமுக. எம்ஜிஆர், 1972ம் ஆண்டில் அக்டோபர் 17ல் அதிமுகவை தொடங்கினார். இன்று அதிமுக 51ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 31 ஆண்டு காலம் தமிழகத்தை அதிமுக ஆட்சி செய்துள்ள பெரிய கட்சியாக திகழ்கிறது. அதிமுக ஆட்சியால்தான் தமிழகம் ஏற்றும் பெற்றுள்ளது. கடைகோடியில் இருக்கிற சாமானியன் கூட நன்மை பெற்றுள்ளது.

அதிமுகவை எதிர்க்க எந்த கொம்பனாலும் முடியாது. எந்த கட்சியாலும் முடியாது. ஏனென்றால் அதிமுக தொண்டன் உழைப்பால் உயர்ந்தவன். எந்த பிரதிபலனும் பார்க்காமல் தலைமை அறிவித்தவுடன் சொந்த வேகைளை விட்டுவிட்டு கட்சிதான் பெரிது, கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என சமமதம் ஏற்று வந்துள்ளீர்கள். இதுதான் அதிமுக கட்சி. அதிமுக தொண்டன் என்று சொன்னாலே பெருமை. எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய 6 மாத காலத்திலே தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். எம்ஜிஆர் முகத்தை பார்த்தாலே போதும், தானாக வாக்குகள் கிடைக்கும். அப்படி மக்கள் சக்தி பெற்ற கட்சியாக அதிமுகவும், அதன் தலைவர்களும் திகழ்ந்தனர்.

ஆட்சிக்கு வந்தபோது கேலி…. – நாட்டு மக்களுக்கு நன்மை செய்கிற கட்சி என்று சொன்னால் அதிமுகதான் முதலில் நிற்கிறது. எம்ஜிஆர், மறைந்தபிறகு இந்த இயக்கம் அழிந்து போய்விடும் என கருணாநிதி கனவு கண்டார். ஆனால், அழியவில்லை. ஜெயலலிதா நான் இருக்கிறேன் என்று அன்றயை தினம் அடையாளம் காட்டப்பட்டார். பிரிந்து இயக்கத்தை ஒன்றாக இணைத்து மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை தமிழகத்தில் ஏற்படுத்தினார். நான் ஜெயலலிதா அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவன். அதன்பிறகு மக்களவைத்தேர்தல், சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று அமைச்சர் ஆனேன். உங்கள் ஆதரவால் தமிழக முதல்வராக வந்தேன்.

அப்போது இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக இருந்தார். பல்வேறு விமர்சனங்களை எங்கள் மீது வைத்தார். இந்த ஆட்சி 10 நாட்கள் தாக்குப்பிடிக்குமா? 1 மாதம் தாங்குமா என ஏளம் கேலி செய்தார். தொண்டர்கள், தமிழக மக்கள் ஆதரவுடன் 4 ஆண்டுகள், 2 மாதங்கள் சிறப்பான ஆட்சி கொடுத்தோம். நான் பொறுப்பு ஏற்றபோது கடுமையான வறட்சி. குடிக்க கூட தண்ணீர் இல்லை. சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் தாகத்தை தீர்த்தோம்.

போர்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி தமிழகம் முழவதும் குடிநீர் பிரச்சனையை தீர்த்தோம். கஜா புயாலால் டெல்டா மாவட்டம் முழுவதும் விவசாயம் அழிந்தது. சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியரோடு கலந்து ஆலோசித்து புயல் வீசிய வேகத்தைவிட விரைவாக செயல்பட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை மீட்டெடுத்தோம். அதன்பிறகு கரோனா வந்தது. சாதாரண கரோனா இல்லை. முகத்தை மறைத்துதான் மற்றவர்களை பார்க்க வேண்டிய சூழ்நிலை. உலகத்தையே கரோனா அச்சுறுத்தியது. அப்படிப்பட்ட கரோனாவை அதிமுக அரசு சிறப்பாக கையாண்டு, அந்த நோயை அகற்றினோம்.

‘கரோனா’ காலக்கட்டத்தில் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. என் கவனத்துக்கு வந்தவுடன் நியாய விலை கடைகளில் 11 மாதங்கள் விலையில்லா அரிசி, சர்க்கரை கொடுத்தோம். குடும்பத்திற்கு 1.000 கொடுத்தோம். மீண்டும் ரூ.1000 உதவித்தொகை கொடுத்தோம். ஏழை, எளியவர்கள் உணவு இல்லாமல் தவிக்ககூடாது என்பதற்காக நாள் தோறும் 7 லட்சம் பேருக்கும் அம்மா உணவகங்கள், சமுதாய கூடங்களில் உணவு தயார் செய்து வழங்கினோம். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கு சென்று உணவு கொடுத்தது அதிமுக அரசு.

இந்த மதுரை மண் ராசியான மண். இந்த மண்ணிலே எது தொடங்கினாலும், தொட்டது துலங்கும். அப்படிப்பட்ட மாவட்டத்தில் முதல் முறையாக நான் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டபிறகு வீர வராலற்று எழுச்சி மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். மதுரை மண்ணில் தொடங்கப்பட்ட அனைத்தும் வெற்றி வெற்றிதான். அதனால், இனி அதிமுக வெற்றி நடைப்போடும்.

காவிரி பிரச்சினை்ககுத் தீர்வு: திமுக அரசின் 2 ஆண்டு காலத்தில் தமிழகம் பின்னடைவைதான் பார்க்கிறோம். 50 ஆண்டு காலம் தீர்க்க முடியாத காவிரி நதி நீர் பிரச்சனையில் ஜெயலலிதா தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றம் மூலம் தீர்ப்பை பெற்றார். அதுபோல், டெல்டா பாசன விவசாயிகள், தங்கள் பொன் விளைகின்ற பூமியை மீத்தேன் திட்டத்துக்கு பறிப்போய்விடும் என அச்சத்தில் இருந்தார்கள்.

டெல்டா பாசன விவசாயிகள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள். நான் ஒரு விவசாயி என்று அவர்களிடம் கூறினேன். ஒவ்வொரு விவசாயியும் ரத்தத்தை மண்ணில் சிந்தித்துதான் வேளாண் பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள். அவர்களுடைய கஷ்ட நஷ்டத்தை புரிந்து உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தினோம். மத்திய அரசும் எங்கள் கோரிக்கையை ஏற்று பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா பகுதியை அறிவித்தது. திமுக அரசுக்கு பொய்தான் மூலத்தனம். ஆனால், இந்த பழனிச்சாமி சாதித்து காட்டுகிறவன்.

கச்சத்தீவு தாரை வார்த்தது திமுக: இந்தியாவிலே உயர் கல்வி படிக்கிற மாணவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் பெற்றது. அதிக தேசிய விருது பெற்ற மாநிலமாக தமிகத்தில் சிறந்த ஆட்சியை கொடுத்தோம். கடந்த 18ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ராமேசுவரத்துக்கு சென்று கச்சதீவை மீட்போம் என்று பச்சை பொய் பேசினார். கச்சதீவு திமுக ஆட்சியில்தான் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது. தட்டிக் கேட்கவில்லை. போராட்டம் நடத்தவில்லை. இன்று முதல்வர் முக.ஸ்டாலின் வீர வசனம் பேசுகிறார். கச்சதீவு பறிப்போனதால் ராமேசுவரம் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது ஓய்வெடுக்கவும், வலைகளை காய வைப்பதற்கும் கச்சத்தீவை பயன்படுத்தினார். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என ஜெயலலிதா பலமுறை வலியுறுத்தினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கச்சத்தீவை மீட்க போராடினார். உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், அப்போது ஆட்சியில் இருந்த கருணாநிதி பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மத்திய அரசு, கச்சத்தீவை மீட்க முடியாது, ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என பதில் மனு தாக்கல் செய்தது. அதே பதில் மனுவை கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் போட்டார்.

மீண்டும் ஜெயலலிதா அதிமுக ஆட்சியை கொண்டு வந்தபிறகு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்துள்ளார். கச்சத்தீவை மீட்க போராடுகிற கட்சியாக அதிமுக உள்ளது. 13 ஆண்டு காலம் மத்திய அமைச்சரவையில் திமுக அமைச்சர்கள் இருந்தனர். அப்போது கச்ச தீவை மீட்க முயற்சி எடுக்கவில்லை. இப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று பதறிப்போய் அச்சத்தின் அடிப்படையில்தான் மீனவர்கள் மத்தியில் கவர்ச்சிகரமாக பேசி கச்சத்தீவை மீட்போம் என பொய் பேசுகிறார்.

சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு: சிறுபான்மை மக்கள் கண்ணின் இமைபோல் அதிமுக ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்டார்கள். சாதிக்கும், மதத்திற்கும் அப்பார்ப்பட்ட கட்சியாக அதிமுக உள்ளது. தமிழகத்தில் தற்போது திரும்பிய பக்கம்மெல்லாம் கொலை, கொள்ளை, திருட்டு நடக்கிறது. சட்டம், ஒழுங்கு அடியோடு சீர்கேட்டுபோய் உள்ளது.

நீட் தேர்வு நாடகம்: ‘நீட்’ தேர்வில் திமுக அரசு மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘நீட்’ தேர்வை ரத்துசெய்ய கோரி இன்று போராட்டம் நடத்துகிறார். 2010ம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். திமுகவை சேர்ந்த காந்தி செல்வன், இணை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில்தான் ‘நீட்’ தேர்வு வந்தது. இது ஆவணம். மறைக்க முடியாது. இதை மறைத்து இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். எவ்வளவு ஏமாற்று வேலையை திமுக செய்கிறது.

2021 சட்டசபை பொதுத்தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி போன்றோம் திமுக ஆட்சிக்கு வந்ததும், ‘நீட்’ ரத்து செய்வதற்கு முதல் கையெழுத்துப்போடப்படும் என கூறினர். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டாகியும் ‘நீட்’ தேர்வு ரத்துக்கு என்ன முயற்சி எடுத்தீர்கள். இதற்கு பதில் சொல்லுங்கள். மாணவர்களை ஏமாற்றாதீர்கள். ‘நீட்’தேர்வை கொண்டு வந்தது திமுக. அதை தடுக்க போராடுவது அதிமுக. இவர்களை கொண்டு வந்துவிட்டு அதை ரத்து செய்வதற்கு நாடகம் ஆடுகிறார்கள்.

அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு: ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு அரசாங்கம் என்று சொன்னால் அது திமுக அரசுதான். முன்னாள் திமுக அமைச்சர்கள் 13 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. 13 ஆண்டு காலமாக வாய்தா வாங்கி வந்தார்கள். தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த வழக்கை அவசரம் அவசரமாக விசாரித்து 4 அமைச்சர்கள் அந்த வழக்கில் விடுமுறை ஆகியிருக்கிறார்கள். நாங்கள் சும்மா விட மாட்டோம். உச்ச நீதிமன்றம் சென்று வழக்கை தொடர்வோம்.

அதிமுகவை அழிக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைக்க வேண்டாம். உங்கள் கட்சியை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பொடுகிறீர்கள். அனைத்தும் சட்டரீதியாக சென்று சட்டரீதியாக வெல்வோம். நான் ஒரு சாதாரண தொண்டன். ஒரு தொண்டன் கூட எம்எல்ஏ, எம்பி ஆகலாம். ஏன் முதலமைச்சராகலாம். ஒரு கிளைச்செயலாளராக இருந்து, ஒன்றிய பொறுப்புக்கு, மாவட்ட பொறுப்புக்கு வந்து மாநில பொறுப்புக்கு வந்து நிர்வாகிகள், தொண்டர்கள் ஆதரவுடன் தற்போது பொதுச்செயலாளராக வந்துள்ளேன். வேறு எந்த கட்சியிலாவது முடியுமா?

அதிமுகவில் மட்டுமே உழைக்கிற சாதாரண தொண்டன் கூட உச்சப்பட்ச பதவிக்கு வர முடியும். இதுவரை எந்த மாநாட்டிற்கு இதுபோல் 15 லட்சம் தொண்டர்கள், மக்கள் வந்தில்லை. அந்த சரித்திர சாதனையை நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்படுத்தி தந்துள்ளீர்கள்” என்று அவர் பேசினார்.