என்எல்சி நிறுவனம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்

என்எல்சி நிறுவனம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

கடலூரில் இன்று (ஆக.1) செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ கூறுகையில், “என்எல்சி. நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் நிலம் கையகப்படுத்தும் பணி பாதிக்கப்பட்ட விவசாயிகள் தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிரந்தர வேலை, உரிய இழப்பீடு தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எனது தலைமையில் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தோம். சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு கொண்டுவரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக நிலம் வழங்கியவர்கள் குடும்பத்தில் 1500 பேருக்கு வேலை மற்றும் நிரந்தர வேலை வழங்குவதாக என்எல்சி நிர்வாகம் உறுதி அளித்தது. அவர்களுக்கு 3 ஆண்டு பயிற்சி அளித்து அதன் பிறகு வேலையில் சேர்க்கப்படும் என்று தெரிவித்தனர். நிலம் என கையகப்படுத்தப்பட்ட நபர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.4 லட்சம் தருவதாக என்எல்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர்.

பல்வேறு எதிர்ப்புகள் நிலவி வரும் நிலையில் சேத்தியாத்தோப்பு வளையமாதேவி பகுதியில் வளர்ந்து வரும் நெற்பயிர்களை ஏன் என்எல்சி நிர்வாகம் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக பெரிய இயந்திரங்களைக் கொண்டு தோண்டினார்கள் என கேட்டேன். வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் என்எல்சி யிலிருந்து மழை நீரை பாதுகாப்பாக வெளியேற்ற இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், நிலம் வழங்கியவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, கூடுதல் இழப்பீடு போன்றவைகளை வழங்க என்எல்சி நிர்வாகம் 2 மாதத்துக்குள் நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்பதனையும் எச்சரிக்கையாக தெரிவிக்கின்றோம் இவ்வாறு கூறினார் .மாநகராட்சி கவுன்சிலர் கண்ணன் மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.