கணவன் சொத்தில் மனைவிக்கு சமபங்கு கிடைக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, பெ.சண்முகம் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: கடந்த ஜூன் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், “கணவர் வருமானம் ஈட்டி சொத்து சம்பாதிக்கிறார் என்றால் வீட்டையும், குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிக்கிற வேலையை மனைவி செய்கிறார் என்பதை சுட்டிக்காட்டி, திருமணத்துக்கு பின் சேரும் கணவரின் சொத்துகளில் மனைவிக்கு சம பங்குஉண்டு” என்று குறிப்பிட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பை வழங்கியமைக்காக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிக்கு பாராட்டுகள். மனைவியின் வீடுசார்வேலை, கணவன் செய்வதைப்போல 8 மணி நேர வேலை அல்ல,மாறாக நாள்முழுவதும் அவர் குடும்பத்துக்காக உழைக்கிறார் என்பதே உண்மை. கணவர் வருமானம் ஈட்டுவதும், மனைவி குடும்பத்தை பராமரிப்பதும் இரண்டுமே குடும்ப நலனுக்காகத்தான். இதன்மூலம் கிடைக்கும் பயனிலும் இருவருக்கும் பங்கு உண்டு.
தீர்ப்பின் அடிப்படையில் சட்டம்: திருமணத்துக்குப் பின் கணவன் சேர்க்கும் சொத்துகளில் மனைவிக்கும் சமபங்கு உள்ளது என்பதே உயர் நீதிமன்ற தீர்ப்பின் சாரம். பெண்கள் இயக்கங்கள் நீண்டகாலமாகவே இதனை சட்டமாக்க வேண்டும் எனக் கோரி வந்துள்ளன. தீர்ப்பு என்ற நிலையிலேயே நிறுத்தப்பட்டால், அது குறிப்பிட்ட வழக்குக்கு மட்டுமே பொருந்தும். தீர்ப்பின் அடிப்படையில் சட்டம் நிறைவேற்றப்பட்டால்தான் அனைவருக்கும் பொருந்தும்.
எனவே, இத்தீர்ப்பின் அடிப்படையில், திருமணத்துக்குப் பின் சேரும் மொத்த சொத்துகளில் மனைவிக்கு சமபங்கை உறுதி செய்யும் சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.