கலை, அறிவியல் கல்லூரிகளில்,பொதுப் பாடத்திட்டத்தை அமல்படுத்துவதை திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை:
கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உயர் கல்வித் துறை அறிவிப்புக்கு, தன்னாட்சிக் கல்லூரிகளின் முதல்வர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
தங்களின் உரிமைகள், அதிகாரத்தை மாநில அரசு பறிக்க முயல்கிறது என்றும், பொதுப் பாடத் திட்டம்அமல்படுத்தப்பட்டால் கல்லூரி மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும், தேசிய அளவில் தமிழககல்லூரிகள் பின்தங்கும் என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். ஆனால், அதையெல்லாம் அலட்சியப்படுத்தி, பொதுப் பாடத் திட்டத்தைகட்டாயம் அமல்படுத்த வேண்டும்என்று அமைச்சர் வற்புறுத்தியிருப்பது, வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் தனித்துவத்தை, சிறப்பை சீர்குலைக்கும் இந்த முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவதை ஏற்க முடியாது.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் பாழடிக்கும், பொதுப்பாடத் திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்துக் கல்லூரிகள், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள், தமிழக அரசின் இந்த அலட்சியப் போக்கை கண்டிப்பதுடன், இந்த முடிவை திரும்பப்பெறுமாறு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.