கீழடி அகழாய்வு: பாம்பு தலை போன்ற உருவம் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதில் 9-வது குழியில் சுமார் 7 அடி ஆழத்தில் தோண்டியபோது பானை ஓடுகள் வெளிவந்தன.

அவற்றை வகைப்படுத்தியபோது, சுடு மண்ணால் செய்த பாம்பின் தலைப்பகுதி போன்ற உருவம் ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது. பாம்பின் கண்கள், வாய் போன்ற அமைப்பும் மிக நேர்த்தியாக செய்யப்பட்டுள்ளது.

இச்சுடு மண் உருவமானது சொர சொரப்பான மேற்பரப்புடன் சிவப்பு பூச்சு பெற்று காணப்படுகிறது. இது 6.5 செ.மீ. நீளம், 5.4 செ.மீ. அகலம், 1.5 செ.மீ. பருமனும் கொண்டுள்ளது. இதுதவிர சுடுமண்ணால் செய்த பந்து, வட்டச்சில்லுகள் போன்றவையும் கிடைத்துள்ளன.

இந்த தகவலை மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தம் தெரிவித்தார்.