கோட்டா தற்கொலைகள்; நீட்டை ரத்து செய்யுங்கள்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அகற்றாமல், தற்கொலைகளை மட்டும் தடுக்க நினைப்பது முழுமையாக தீர்வை வழங்காது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அன்புமணி இன்று (ஆக.19) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட், ஐஐடி, ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதில் புகழ்பெற்ற ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ள விடுதிகளில், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க அங்குள்ள மின்விசிறிகளில் ஸ்பிரிங்குகளும், அபாய ஒலி எழுப்பும் கருவிகளும் பொருத்தப்படுவதை நகர நிர்வாகம் கட்டாயமாக்கியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் வேதனை அளிக்கின்றன.

ஆனால், எய்தவன் இருக்க அம்பை நொந்த கதையாக, மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அகற்றாமல், தற்கொலைகளை மட்டும் தடுக்க நினைப்பது முழுமையாக தீர்வை வழங்காது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரம் நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சிக்கு பெயர் பெற்றது ஆகும். அந்த நகரில் நீட், ஐஐடி-ஜேஇஇ உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு 40 ஆயிரத்திற்கும் கூடுதலானவர்கள் பயிற்சி பெறுகின்றனர். அவர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள விடுதிகளில் தங்கி பயிற்சி பெறுகின்றனர். நுழைவுத்தேர்வுக்கு தயாராக முடியாதவர்களும், தேர்வில் தோல்வியடைந்தவர்களும் தற்கொலை செய்து கொள்கின்றனர். கடந்த ஆண்டில் 15 பேரும், நடப்பாண்டில் இதுவரை 20 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதைத் தடுப்பதற்காகவே இந்த ஏற்பாட்டை கோட்டா நிர்வாகம் செய்திருக்கிறது.

மின்விசிறிகளில் தான் மாணவர்கள் அதிகம் தூக்கிட்டுக் கொள்கின்றனர் என்பதால், மின்விசிறிகளில் ஸ்பிரிங்குகளும், அபாய ஒலி எழுப்பும் கருவிகளும் பொருத்தப்படுகின்றன. 20 கிலோவுக்கு அதிக எடை கொண்டவர்கள் தூக்கிட்டுக் கொண்டால் ஸ்பிரிங் விரிந்து காப்பாற்றி விடும்; அபாய ஒலியும் எழும்பி தற்கொலை முயற்சியை காட்டிக் கொடுத்து விடும். இது நல்ல ஏற்பாடு தான். ஆனால், நிரந்தரமான, முழுமையான தீர்வு அல்ல.

மாணவ, மாணவியருக்கு ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவது தான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும். மாறாக, சாத்தியமற்ற இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை எட்டும்படி மாணவர்களுக்கு மனதளவில் நெருக்கடியைக் கொடுப்பதும், அவற்றை சாதிக்க முடியாத மாணவ, மாணவியரை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கி தற்கொலை செய்து கொள்ளத் தூண்டுவதும் எப்படி நல்லத் தீர்வாக இருக்க முடியும்? நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளும் இந்த வகையைச் சேர்ந்தவை தான். இந்தத் தேர்வுகளை ரத்து செய்வது தான் மாணவர்களை தற்கொலைகளில் இருந்து தடுக்குமே தவிர, மின்விசிறிகளில் செய்யப்படும் மாற்றம் தற்கொலைகளை தடுக்காது.

நுழைவுத் தேர்வு பயிற்சிக்காக ஒவ்வொரு மாணவனும் ரூ.20 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இது எல்லா குடும்பங்களுக்கும் சாத்தியம் அல்ல. ரூ.20 லட்சம் செலவழித்த பிறகும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத போது தான், தற்கொலை எண்ணம் தலைதூக்குகிறது. இதிலிருந்து மாணவர்களைக் காக்க நீட், ஐஐடி-ஜே.இ.இ. உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும்; மாணவர்களைக் காக்க இதை உடனடியாக செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.