கோவளம் கடற்கரையில் அலையாத்தி காடுகளை உருவாக்கும் திட்டம்

 கோவளம் கடற்கரை கழிமுகப் பகுதி உவர் நிலங்களில், சுற்றுச்சூழலைக் காக்கும் அலையாத்தி காடுகளை உருவாக்கும் வகையில் மிஷ்டி இயக்கம் மூலம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், அலையாத்தி மரக்கன்றுகளை நட்டுவைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் பகுதியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, கடற்கரை கழிமுகப் பகுதி உவர் நிலங்களில் சுற்றுச்சூழலைக் காக்கும் அலையாத்தி காடுகளை உருவாக்கும் வகையில், மிஷ்டி இயக்கம் மூலம் அலையாத்தி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் அலையாத்தி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

மேலும், இத்திட்டத்தின் மூலம் கடற்கரை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேம்பட்டு, புயல் சீற்றம் தடைபடும். மிஷ்டி இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ள கடற்கரை கழிமுகப் பகுதிகளான, உவர் நிலங்களில் உள்ள அலையாத்தி காடுகளை பாதுகாப்பதிலும், புதிதாக அலையாத்தி மரக்கன்றுகளை வளர்ப்பதில் சமூக ஆர்வலர்களுடன் மேற்கொண்டு வரும் பணிகள் பாராட்டுக்குரியது. அலையாத்தி காடுகள் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு வனத்துறை, சமூக ஆர்வலர்கள், கடற்கரை பகுதி கிராம மக்கள், மாணவர்களுக்கும் மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.