அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை கைது செய்யவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய புகாரில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக அவரது தம்பி அசோக்குமாரை விசாரணைக்கு ஆஜராக கூறி அவருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
ஆனால், விசாரணைக்கு தேவையான ஆவணங்களை சேகரிக்க வேண்டும், இதயத்தில் பிரச்சினை இருக்கிறது என பல காரணங்களை கூறி ஆஜராகாமல் தாமதித்து வந்தார். மேலும், அமலாக்கத்துறை காவலில் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே, கரூரில் அசோக்குமார் தனது மனைவி பெயரில் புதிதாக கட்டிவரும் பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
மனைவி, மாமியாருக்கு சம்மன்: அப்போது, ரூ.30 கோடி மதிப்பிலான அந்த இடத்தை ரூ.10 லட்சம் என கணக்குகாட்டியிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டு, அதனை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கினர். இதையடுத்து, அசோக்குமாரின் மனைவி நிர்மலா மற்றும் மாமியார் லட்சுமியை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் அமலாக்கத்துறை அவர்களுக்கும் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், சம்மன் அனுப்பியும் யாரும் ஆஜராகாததால், அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக, அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருந்தது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் அசோக்குமார் கேரளா மாநிலம் கொச்சியில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாகவும், அவரை அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், அசோக்குமாரை இன்னும் தாங்கள் கைது செய்யவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை, அமலாக்கத்துறை கேரளா மாநிலம் கொச்சியில் வைத்து கைது செய்துள்ளதாக தவறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. அசோக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்யவில்லை. செந்தில் பாலாஜியிடம் மேற்கொண்டு வரும் விசாரணையின் அடிப்படையில், அவரது தம்பி அசோக்குமாருக்கு, கடந்த ஜூன் 16, 21, 29-ம் தேதி மற்றும் ஜூலை 15-ம் தேதிகளில் 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது.
ஒருமுறைகூட ஆஜராகவில்லை: ஆனால், சம்மனுக்கு நம்பகத்தன்மையற்ற விளக்கங்களுடன் பதில் அளித்து, ஒருமுறை கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக அசோக்குமாரின் மனைவி நிர்மலா மற்றும் அவரது தாயார் லட்சுமி ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அவர்களும் விசாரணைக்கு இதுவரை ஆஜராகவில்லை. இந்த வழக்கில், இவர்களின் மூவரின் வாக்குமூலங்கள் மிக முக்கியமானது. இவர்களது வாக்குமூலங்கள், இந்த வழக்கில் மிக முக்கிய பங்காற்றும் என்பதால், இவர்களுக்கு சம்மன் அனுப்பிவைக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.